பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 722 

   (இ - ள்.) அகழ் கடல் தானே வேந்தே - கடலனைய சேனையையுடை அரசே!; பவழம் கொள் கோடு நாட்டி - பவழத்தைக் கொள் கொம்பாக நட்டு; பைம் பொனால் வேலி கோலி - புதிய பொன்னால் வேலி வளைத்து; தவழ் கதிர் முத்தம் பாய்த்தி - பரவும் ஒளியையுடைய முத்துக்களை மணலாகப் பரப்பி; தன் கையால் தீண்டி - தன் கையாலே தீண்டி; நல்நாள் - நல்ல நாளிலே; புகழ் கொடி நங்கை தன் பேர் - புகழ் பெற்ற கொடி போலும் நங்கையாகிய திலோத்தமையின் பெயரை; பொறித்தது ஓர் கன்னி முல்லையாகிய முல்லை - இட்டு வளர்த்ததாகிய ஒரு கன்னியாகிய முல்லை; அணி எயிறு ஈன்றது - அழகிய முறுவல்போல அரும்பியது.

   (வி - ம்.) திலோத்தமை : பதுமையின் நற்றாய்.

   கோடு - ஈண்டுக் கொள்கொம்பு. பாய்த்தி - பரப்பி. நங்கை : பதுமையின் நற்றாயாகிய திலோத்தமை. கன்னிமுல்லை - இளமையுடைய முல்லைக்கொடி. எயிறுபோல அரும்பிற்று என்க.

( 103 )
1269 வலம்பலர் கோதை சிந்த மயிலென வொருத்தி யோடிக்
கொம்பலர் நங்கை பூத்தாள் பொலிகெனக் குனிந்த விற்கீ
ழம்பலர் கண்ணி யார நிதியறைந் தோகை போக்கிக்
கம்பலம் போர்த்த போலுங் கடிமலர்க் காவு புக்காள்.

   (இ - ள்.) வம்பு அலர் கோதை சிந்த ஒருத்தி மயில் என ஓடி - (அரும்பியது கண்டு) மணம் விரியும் மலர்மாலை சிந்த ஒரு பணிப் பெண் மயில்போல ஓடிவந்து; கொம்பு! பொலிக! அலர் நங்கை பூத்தாள் என - கொம்பனையாய்! வாழ்க! நங்கை அலர்ந்தாள் என்று சொல்ல; குனிந்த வில் கீழ் அம்பு அலர் கண்ணி - குனிந்த வில்லின்கீழ் அம்பு போல மலர்ந்த கண்களையுடைய பதுமை; நிதி ஆர அறைந்து - செல்வத் திரளை யாகும் நிறையக் கொள்ளுமாறு பறை அறைந்து; ஓகை போக்கி - மகிழ்ச்சியைப் பலரும் அறிய அறிவித்து; கம்பலம் போர்த்த போலும் கடி மலர்க் காவு புக்காள் - கம்பலத்தைப் போர்த்தாற் போலும் மணமலர் நிறைந்த பொழிலை யடைந்தாள்.

   (வி - ம்.) ஒகை : உவகை யென்றதன் மரூஉ.

   வம்பு - மணம். ஒருத்தி - ஒருபணிமகள். கொம்பு : ஆகுபெயர் : விளி. அலர் நங்கை என்றது முல்லைக்கொடியை. கண்ணி : பதுமை. கம்பலம் என்றது சித்திரைச் செய்கையுடைய வண்ணப் படாத்தை. ”சித்திர சய்கைப்படாம் போர்த்ததுவே ஒப்பத்தோன்றிய உவவனம்” என்றார் மணிமேகலையினும் (3. 161-9) ”நீ வளர்த்த முல்லைக்கொடி நின்முறுவல்போல அரும்பீன்றது.” என்று சொல்லக்கேட்ட பதுமை ஓகைபோக்கி காவுபுக்காள் என வினைமுடிவு செய்க.

( 104 )