(வி - ம்.) பாம்பு தீண்டியவுடன் பதுமை, 'அம்மாவோ!' என்று அலறி ஓடினாள். முல்லை மலர்ந்ததைப் பார்க்க வந்த பதுமை தன் நற்றாயையும் வரவேற்றாள் என்று கருதிய தோழி, 'நங்கை அடிகளோ?' என்று வினவியவாறு வந்தாள். 'அங்குறை யரவு' என்பதை 'அம் குறை அரவு' எனப்பிரித்துக், 'குறையரவு' என்பது காலம் நீட்டித்தலாற் பாம்பு குறைந்து, ஒரு கோழி யளவிற்குப் பறந்து செல்லும் என்று கூறி அதனைக் 'குக்குட சர்ப்பம் என்ப'- என்று நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும், 'அது அரிகுரற் கோழி நாமத் தரவவட் கடித்ததாக' (சீவக. 1755) என்றதனாலும் உணர்க என்பர். மேலும் 'தடுத்ததனை வெட்டுதல் பாம்பிற் கியல்பாகலின், முகத்தை நோக்கின பாம்பு, அணுகின கையிலே தீண்டிற்று' என்பர். ஏர் - ஒக்கும்.
|
( 106 ) |