பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 725 

1273 பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் பையு ளெய்திக்
கொதிநுனை வேலி னாயிங் கிருக்கெனக் குருசி லேகிக்
கதுமெனச் சென்று நோக்கிக் காய்சினங் கடிதற் கொத்த
மதிமிகுத் தவல நீக்கு மந்திரம் பலவுஞ் செய்தான்.

   (இ - ள்.) பதுமையைப் பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி - (இங்ஙனம்) பதுமையைப் பாம்பு தீண்டிய தென்றவுடன் வருத்தமுற்று; கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என - காய்ந்த கூரிய வேலினாய்! இங்கேயே இருப்பாயாக என்று கேட்டுக்கொண்டு; குருசில் ஏகி - உலோக பாலன் அரண்மனைக்குச் சென்று; கதும் எனச் சென்று நோக்கி - விரைந்து பதுமை யிருக்குமிடம் போய்ப் பார்த்து; காய் சினம் கடிதற்கு ஒத்த - நஞ்சின் கடுமையைப் போக்குதற்குரிய; மதி மிகுத்து - அறிவினால் நுனித் தறிந்து; அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான் - துன்பத்தை நீக்குதற்குரிய மந்திரத்தைக் கூறி மருந்துகள் பலவற்றையும் செய்தான்.

   (வி - ம்.) 1266 - முதல், 1273 - வரை எட்டுச் செய்யுட்களையும் ஒரு தொடராக்கிப் 'பதுமையைப் பாம்பு தீண்டிற்றென்றலும் பையுள் எய்திக் கொதிநுனை வேலினானை யிருக்கெனக் குருசில் ஏக' (1273) என்பதனை முதற்கட் பெய்து, உலோகமா பாலன் போகின்ற போது, 'பாம்பு தீண்டியது எங்ஙனம்?' என வினவினதற்கு, வந்தவீரன் கூறுகின்றானாகக் கொண்டு, 'கொய்தகைப் பொதியிற் சோலை' (1267) முதலாகக் கூறும் செய்தியை அமைப்பர் நச்சினார்க்கினியர். 'இங்ஙனம் மாட்டுறுப்பாகக் கூறாது செவ்வனே கூறிற் பாம்பு கடித்தமை கடுகக் கூறிற்றாகாமை உணர்க' என்று மேலும் அவர் காரணங் கூறுவர்.

   நூலாசிரியர்க் கில்லாத கருத்தை இவர் புகுத்துகிறார் என்று கொள்ளுத லல்லது இது செவ்வன் உரையாகாது. கதை கூறும் முகத்தால் விரித்துக் கூறினார் என்று கூறுதலே சால்புடையதாகும்.

( 108 )
1274 வள்ளறான் வல்லவெல்லா மாட்டினன் மற்று மாங்க
ணுள்ளவ ரொன்ற லாத செயச்செய வூறு கேளா
தள்ளிலைப் பூணி னாளுக் காவியுண் டில்லை யென்ன
வெள்ளெயிற் றரவு கான்ற வேகமிக் கிட்ட தன்றே

   (இ - ள்.) வள்ளல்தான் வல்ல எல்லாம் மாட்டினன் - உலோகபாலன் தான் கற்றுத் தேர்ந்த விஞ்சைகள் யாவற்றையும் செலுத்தினான்; மற்றும் ஆங்கண் உள்ளவர் ஒன்று அலாத ஊறு செயச் செய - மேலும் ஆங்கு உள்ளவர் எல்லோரும் பல வகையாக உறுவனவற்றைச் செய்யச் செய்ய; கேளாது - (அவற்றைக்) கேளாமல்; அள் இலைப் பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன - கூரிய இலை வடிவமான பூணுடையாளுக்கு உயிர் உண்டு இல்லை என்னும்படி; வெள் எயிற்று அரவு கான்ற வேகம்