| பதுமையார் இலம்பகம் | 
736  | 
  | 
| 
    (இ - ள்.) நோக்கினான் நிறையும் நாணும் மாமையும் கவினும் வளையும் நொய்தில் போக்கினாள் - அவ்வாறு நோக்கியவள் தன் நிறையையும் நாணையும் நிறத்தையும் அழகையும் வளையையும் விரைவிலே போக்கினாள்; பொன்நிறப் பசலை போர்த்தாள் - பொன்னிறமான பசலையை உடம்பெலாம் போர்த்தாள்; அமருள் ஆனாது ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள் - போரில் அமையாமல் எறிந்த முருகன் ஒரு வேல் இரண்டு ஆனது போன்ற கண்ணினாள் ஆகிய அவள்; மூழ்கிற்று - காமன் அம்பு உடம்பிலே மூழ்கியது; அநங்கன் அப்புத் தூணியை ஆக்கினாள் - (அதனால்) காமனுடைய அம்பறாத் தூணியைத் தன் உடம்பிலே உண்டாக்கினாள். 
 | 
| 
    (வி - ம்.) ”அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச் - செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது” (சிலப். 2 : 512) என்றார் பிறரும். 
 | 
( 126 ) | 
வேறு
 | 
|  1292 | 
ஆட்சி யைம்பொறி யாள னுடம்பெனும் |  
|   | 
பூட்சி நீள்கொடிப் புற்றி னகத்துறை |  
|   | 
வாட்க ணோக்கெனும் வையெயிற் றாரழல் |  
|   | 
வேட்கை நாகத்தின் மீட்டுங் கொளப்பட்டாள் | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆட்சி ஐம்பொறி ஆளன் உடம்பு எனும் - தாம் ஏவல் கொள்ளும் தொழிலையுடைய ஐம்பொறியை ஆளுதலையுடைய சீவகனது உடம்பு என்னும்; பூட்சி நீள்கொடிப் புற்றின் அகத்து உறை - மேற்கோளாகிய நீண்ட கொடி வளரப்பெற்ற புற்றிலே வாழ்கின்ற; வாள்கண் நோக்கு எனும் வைஎயிற்று ஆரழல் வேட்கை நாகத்தின் - ஒளி பொருந்திய கண்களின் நோக்கம் என்கிற கூரிய பற்களையுடைய வேட்கையாகிய நாகத்தின் நஞ்சாலே; மீட்டும் கொளப்பட்டாள் - திரும்பவும் பற்றப் பட்டாள். 
 | 
| 
    (வி - ம்.) 'வாட்கண்' என்பதைப் பதுமைக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர். 
 | 
| 
    'நாட்டம் இரண்டும் அறிவுடம்படுத்தற்குக் - கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்' (தொல். களவு. 5) என்பதனால், இருவரும் எதிர் நோக்கியவிடத்துக் கூட்டும் குறிப்புரை நிகழ்ந்தும் இயற்கைப் புணர்ச்சி நிகழாமையின், அவட்கு முற்செய்யுளிற் கூறிய வருத்தத்திற்கு இவன் வேட்கை நோக்கமே காரணம் என்று இக் கவியிற் கூறினார். இந் நோக்கம் இன்றேல் இவட்கு இது நிகழாதென்க; 'பெருமையும் உரனும் ஆடுஉ மேன' (தொல். களவு. 7) என்பதனால் இவற்கு வருத்தம்புலப் படாதாயிற்று. வேட்கையை நாகமாகவும், நோக்கினைப் பற்களாகவும், உடம்பினைப் புற்றாகவும் உருவகஞ் செய்தனர். 
 | 
( 127 ) |