பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 743 

   (வி - ம்.) அரிய என்றது அதன்கண் துணையின்றித் தனித்துறை வோர் பொறுத்தலரிய என்பது பட நின்றது. சிந்தை கூர்ந்தது என மாறுக. கூர் : மிகுதிப் பொருட்டு.

( 139 )
1305 பூங்க ணவ்வயி னோக்கம் பொறாதபோல்
வீங்கி வெம்மைகொண் டேந்தின வெம்முலை
யீங்கி தென்னென விட்டிடை நைந்தது
பாங்கி லாரிற் பரந்துள தல்குலே.

   (இ - ள்.) பூங்கண் அவ்வயின் நோக்கம் பொறாதபோல் - (பதுமையின் மலர்க் கண்கள்) அவ்விடத்து யான் நோக்கிய நோக்கத்தைத் தாங்காமல் நிலத்தை நோக்கி என்னை வருத்தினாற்போலவே; வெம் முலை வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின - பின்னர், முலைகளும் வீங்கிக் கொடுமை கொண்டு ஏந்தி வருத்தின; ஈங்கு இது என் என இட்டிடை நைந்தது -இவ்விடத்திற் பொறாமை என்னே என்று மெல்லிடை வருந்தியது; பாங்கு இலாரின் அல்குல் பரந்துளது - அப்போது பிறரிடுக்கண் கண்டு மகிழ்வாரைப் போல அல்குல் பரந்தது.

   (வி - ம்.) பரந்துளது : ஒருசொல். இனிக் கண்கள் தமக்கு முற்பட்டு வருத்தியதற்குப் பொறாதன போலப் பின்பு முலைகளும் வருத்தின என்றும் ஆம்.

( 140 )
1306 முருகு வார்குழ லாண்முகிழ் மென்முலை
பெருகு நீர்மையிற் பேதுற வெய்திநின்
றுருகு நுண்ணிடை யோவியப் பாவைத
னருகு நோக்கமெ னாவி யலைக்குமே.

   (இ - ள்.) முருகு வார்குழலாள் - மணமிகு நெடிய குழலாளாகிய; ஓவியப் பாவை - ஓவியத்தில் எழுதப் பெற்ற பாவை போல்வாளின்; முகிழ் மென்முலை - முகிழ்த்த மென்முலைகளும்; பெருகும் நீர்மையின் பேதுறவு எய்தி நின்று உருகும் நுண் இடை - அவை வளரும் இயல்பாலே துன்பம் அடைந்து வருந்துகின்ற நுண்ணிய இடையும்; அருகும் நோக்கம் - குறிக் கொண்டு நோக்காத நோக்கமும்; என் ஆவி அலைக்கும் - என் உயிரைக் கெடுக்கும் அளவாகா நின்றன.

   (வி - ம்.) முருகு - மணம். குழலாள் : பதுமை, நீர்மை - தன்மை. முலையும் இடையும் நோக்கமும் என ஆவியலைக்கும் என்க.

( 141 )
1307 புகைய வாவிய பூந்துகி லேந்தல்குல்
வகைய வாமணி மேகலை வார்மது
முகைய வாவிய மொய்குழல் பாவியேன்
பகைய வாய்ப்படர் நோய்பயக் கின்றவே.