பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 774 

   (இ - ள்.) மாடமே! நெடியாய்! மழை தோய்ந்துளாய்! - மாடமே! நீண்டுளாய்! முகில் பொருந்தியுளாய்!; கோடி நுண்துகிலும் குழையும் ஆடு சாந்தமும் அல்லவும் நினக்கு நல்குவேன் - கொடிகளிலே கோடியும் நுண்ணிய ஆடையும் கொடி நாட்டுதற்குப் பண்ணும் துளைகளும் பூசும் வெண்சுதையும் பிறவும் நினக்குத் தருவேன்; நண்பனை நாடி நண்ணுக - நம் நண்பனைத் தேடிக் கண்டு வருவாயாக; நன்று - அது நினக்கு நன்றாகும்!

 

   (வி - ம்.) அரோ : அசை. 'நெடியாய்' என்பதனால் எப்பொருளையுங் காண வல்லாய் என்பதும், 'மழை' என்பதனால் ஈரம் எனும் இரக்கத்தையும் உடையாய் என்ற பொருளும் தோன்ற நின்றன. மற்றும் கோடிப்புடைவையும் மகரக் குழையும் சந்தனமும் நல்குவேன் என்பதூ உம் தோன்றின. 'நன்று' என்றாள் அவனும் பல தருவன் என்னுங் கருத்துப்பட.

( 204 )
1370 ஆட கக்கொழும் பொன்வரை மார்பனைக்
கூடப் புல்லிவை யாக்குற்ற முண்டெனா
நீடெ ரித்திர ணீண்மணித் தூணொடு
சூட கத்திர டோளணி வாடடினாள்.

   (இ - ள்.) ஆடகக் கொழும் பொன் வரை மார்பனை - ஆடகம் எனும் வளமுறு பொன்மலை போலும் மார்பனை; கூடப்புல்லி வையாக் குற்றம் உண்டு எனா - கூடும்படி தழுவி வையாத குற்றம் நுமக்கு உண்டென உரைத்து; நீடு எரித்திரள் நீள் மணித் தூணொடு - நீண்ட நெருப்புத் திரள் போலும் நீண்ட மாணிக்கத் தூணுடன் (எற்றி); சூடகத் திரள் தோளணி வாட்டினாள் - சூடகத்தையும் திரண்ட தோளணியையும் போக்கினாள்.

 

   (வி - ம்.) சூடகம் : ஒருவகைக் கைவளையல் 'சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொடு' (பெருங். 3 : 6 : 91) தோளணி : தொடி. எனா : இறந்தகால வினையெச்சம்.

( 205 )
1371 கொலைகொள் வேலவன் கூடல னேகினா
னிலைகொள் பூணுமனக் கென்செயு மீங்கெனா
மலைகொள் சந்தனம் வாய்மெழுக் கிட்டதன்
முலைகொள் பேரணி முற்றிழை சிந்தினாள்.

   (இ - ள்.) கொலைகொள் வேலவன் கூடலன் ஏகினான் - கொலைத் தன்மைகொண்ட வேலினன் கூடாமற் சென்றுவிட்டான்; நுமக்கு ஈங்கு இலை கொள் பூண் என் செயும் - உங்கட்கு இங்கே இலைவடிவங் கொண்ட இப்பூண்கள் என்ன பயனைச் செய்யும்?; எனா - என்றுரைத்து; மலைகொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட - பொதிய மலைச் சந்தனத்தை மெழுகியிட்ட; முலை