பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 78 

137 முல்லை யங்குழ லார்முலைச் செல்வமு
மல்லன் மாநகர்ச் செல்வமும் வார்கழற்
செல்வர் செல்வமும் காணிய வென்பர்போ
லெல்லி யும்மிமை யாரிமை யாததே.

   (இ - ள்.) இமையார் எல்லியும் இமையாதது - வானவர் இரவிலும் இமையாதது ; முல்லை அம் குழலார் முலைச்செல்வமும் - முல்லையணிந்த அழகிய கூந்தலாரின் முலைச்செல்வமும் (இன்பமும்); மல்லல் மாநகர்ச் செல்வமும்-வளமிகும் மாநகரின் செல்வமும் (பொருளும்) ; வார்கழல் செல்வர் செல்வமும்- கழல் அணிந்தவீரரின் செல்வமும் (வீரமும்) ; காணிய என்பர்போல் - விடாமற் காண்பதற்கு யாம் விழித்திருந்தேம் என்று தம் கண்ணை நோக்கிக் கூறுவார்போல் இருந்தது.

 

   (வி - ம்.) 'என்பவே ' என்பது பாடமாயின், இமையார், 'நீயிர் இவை காண்டற்கு யாங்கள் இமையாதிருந்தது' என்று கண்ணிற்குக் கூறுவாரென்க. ஏகாரம் : ஈற்றசை.

 

   [இமையாதிருத்தல் இமையவர்க்கியல்பு.]

 

   முலைச்செல்வம் என்றதனைப் போகம் என்றும் நகர்ச்செல்வம் என்றதனை நென்மணி முதலிய பொருள் என்றும், கழற்செல்வம் என்றதனை வீரமும் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவது இனிமை பயக்கின்றது.

( 108 )
138 முழவுஞ் சங்கமு முன்றின் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தலொன் றின்மையாற்
புகழ லாம்படித் தன்றிது பொன்னக
ரகழ்தன் மாக்கட லன்னதொர் சும்மைத்தே.

   (இ - ள்.) விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால் - விழவினும் வேள்வியினும் ஒன்றைக் கைவிடுதல் இல்லாமையால் ; முன்றில் முழவும் சங்கமும் முழங்குவ - வாயிலில் முழவும் சங்கும் முழங்குவன ; அகழ்தல் மாக்கடல் அன்னது ஓர் சும்மைத்து - தோண்டப்படும் பெரிய கடலனையதாகிய ஆரவாரமொன்றுடையது; இது பொன்னகர் புகழ்தலாம் படித்தன்று - இப் பொன்னகர் புகழத்தகுந் தன்மையதன்று.

 

   (வி - ம்.) வேள்வி - சிறப்புறு நாட்களிலே நிகழ்வன. வேள்வி என்பது வேள்வு என்று ஈறு திரிந்தது.

( 109 )
139 திங்கண் முக்குடை யான்றிரு மாநக
ரெங்கு மெங்கு மிடந்தொறு முண்மையா
லங்கண் மாநகர்க் காக்க மறாததோர்
சங்க நீணிதி யாற்றழைக் கின்றதே.