பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 787 

புணர்ச்சிப் போழ்தில் பிரிவும் - கணவருடன் கூடியிருக்கும் போதே பிரிவு வருமென்பதையும்; நோய்இல் காலத்து நோயும் - நலமுள்ள காலத்திலேயே நோய் வருமென்பதையும்; நோக்கி - எதிர்பார்த் துணர்ந்து; விளைமதுக் கமழும் கோதை! - விளைந்த தேன் மணக்கும் மாலையாய்!; வேலினும் வெய்ய கண்ணாய்! - வேலினும் கொடிய கண்களையுடையாய்!; துயர் களை - துயரத்தை நீக்குவாயாக; கண் இமைப்பளவும் அவலம் வேண்டா என்றாள் - கண்ணிமைக்கும் போதளவேனும் இந்த அவலம் வேண்டா என்றுரைத்தாள்.

 

   (வி - ம்.) இளமைக்காலத்தே இனி மூப்பு வரும் என்று எதிர்பார்த்திருப்போர் இளமையழி விற்கும் மூப்பிற்கும் வருந்தமாட்டார்; இங்ஙனமே செல்வக்காலத்தே வறுமையையும் புணர்ச்சிக்காலத்தே பிரிவினையும் வரும் என்று எதிர்பார்த்திருப்போர் வருந்த மாட்டார். நீயும் அங்ஙனம் இஃதுலகியல் என்றுணர்ந்து இமைப்பளவும் அவலியாதிரு என்றவாறு. ”வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையார் உள்ளத்தின் உள்ளக்கெடும்” என்பது பற்றிக் 'கண்ணிமைப்பளவும் அவலம் வேண்டா' என்றாள்.

( 229 )
1395 முத்திலங் காகந் தோய்ந்த
  மொய்ம்மலர்த் தாரி னானங்
கைத்தலத் தகன்ற பந்திற்
  கைப்படுங் கவல வேண்டா
பொத்திலத் துறையு மாந்தை
  புணர்ந்திருந் துரைக்கும் பொன்னே
நித்தில முறுவ லுண்டா
  னீங்கினா னல்லன் கண்டாய்.

   (இ - ள்.) பொன்னே! - திருவனையாய்!; பொத்து இலத்து உறையும் ஆந்தை புணர்ந்து இருந்து உரைக்கும் - மரப்பொந்தாகிய இல்லத்தே வாழும் ஆந்தை பேடும் சேவலுமாகக் கூடியிருந்து அவன் வரவைக் கூறும்; நித்திலம் முறுவல் உண்டான் நீங்கினான் அல்லன் - (ஆதலால்) முத்தனைய நின்பற்களின் ஊறிய நீரைப்பருகினவன் நின்னைப் பிரிந்தான் அல்லன்; முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய்ம்மலர்த் தாரினான் - முத்துக்கள் விளங்கும் நின் மார்பினைத் தழுவிய மலர்மாலையான்; நம் கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் - நம் கையிலிருந்து நீங்கிய பந்து போலக் கைப்படுவான்; கவல வேண்டா - கவலையுறல் வேண்டா.

 

   (வி - ம்.) தாரினான் : சீவகன். கைத்தலத்து அகன்ற பந்து மீண்டும் நம் கைக்கே வருமாறுபோல என்க. பொத்து - பொந்து. இல்லம், இலம் என லகரமெய் கெட்டு நின்றது. பொன்னே : விளி. நித்தில முறுவலுண்டான் என்றது நீங்கினான் ஆகாமைக்குக் குறிப்பேதுவாகும்.

( 230 )