பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 791 

   (இ - ள்.) வரை செய் கோலம் மணங்கமழ் மார்பினான் - மலைபோன்று அழகிய மணம் பொருந்திய மார்புடையான்; விரைசெய் தாமரைமேல் விளையாடிய அரச அன்னம் - மணம் கமழும் தாமரைமேல் விளையாடி அரச அன்னங்கள்; நிரை செய் நீலம் அமர்ந்துள ஆயினும் - திரளாகிய நீல மலர்களிடையே பயின்றுளவானாலும்; நினைப்பில என்றனன் - அந்த நீலத்தை நினையா என்றும் கூறினான். (என்று பதுமை கூறினாள்)

 

   (வி - ம்.) நீலம் - பரத்தை. தாமரை - குலமகளிர். எனவே குலமகளிரையே இனி நுகர்வேனென்றான்.

( 236 )
1402 பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல
வின்ன ளிக்குரல் கேட்ட வசுணமா
வன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ
மின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.

   (இ - ள்.) பொன் விளைத்த புணர்முலையாள் சொல - தேமலைத் தோற்றுவித்த புணர்முலையுடையாள் பதுமை இங்ஙனம் கூற; மின்விளைத்தன மேகலை அல்குலாள் - ஒளியைப் பரப்பிய மேகலை அணிந்த அல்குலையுடையாள் ஆகிய நற்றாய்; இன் அளிக்குரல் கேட்ட அசுணமா அன்னளாய் - இனிய அளிக்கத்தக்க குரல் நரம்பின் இசை கேட்ட அசுணமாவைப் போன்றவளாகி; மகிழ்வு எய்துவித்தாள் - பதுமையையும் களிப்படையச் செய்தாள்.

 

   (வி - ம்.) அசுணமா : இசையறிவதொரு விலங்கு. சிலர் அசுணத்தைப் பறவை யென்பர். அசுணம் நல்லிசை கேட்டால் மகிழும், தீயவிசை கேட்டால் துன்புறும் என்பர். 'அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்' (நற். 304) என்றார்.

( 237 )
1403 அன்னந் தானவன் றாமரைப் போதுநீ
நின்னை நீங்கின னீங்கலன் காதலா
னின்ன தாலவன் கூறிற் றெனச்சொனாண்
மன்ன னாருயிர் மாபெருந் தேவியே.

   (இ - ள்.) மன்னன் ஆருயிர் மாபெருந் தேவி - தனபதி மன்னனின் உயிராகிய பேரரசி; அவன் அன்னந்தான் - சீவகன் அன்னமாவான்; நீ தாமரைப்போது - நீ தாமரை மலராவாய்; நின்னை நீங்கினன் - அவன் வினைமேற் செலவே இப்போது நின்னைப் பிரிந்தான்; காதலான் நீங்கலான் - காதலுடையவனாகையால் நின்னை முழுக்கப் பிரிந்தானலன்; அவன் கூறிற்று இன்னது எனச் சொனாள் - அவன் கூறியதன் கருத்து இதுவே என்று நற்றாய் நவின்றாள்.