பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 795 

வெண்மையான ஆடையை இரண்டு துண்டாகக் கிழித்தணிந்தான்; பல்கலன் ஒருமகற்கு அருளி நீக்கினான் - பலவகைப் பூண்களையும் எதிர்ப்பட்ட ஒருவனுக்குக் கொடுத்துப் போக்கினான்; நீள்நெறி ஊக்கினான் - நீண்ட நெறியிலே செல்ல முயன்றான்.

 

   (வி - ம்.) வீக்கினான் : வினையாலணையும் பெயர். துகில் இருதுணி ஆக்கினான் என மாறுக. கடிதிற் செல்லுதற்பொருட்டு நொய்தாக என்றது எதிர்ப்பட்ட ஆடையை இரண்டாகக் கிழித்தனன் என்பது கருத்து. ஒரு மகற்கு ஓர் ஏதிலனுக்கு என்பதுபடநின்றது. ஊக்கினான் - முயன்றான். உவவுறுமதி - கலைகணிரம்பிய முழுமதி.

( 244 )

வேறு

 
1410 வேந்தனால் விடுக்கப் பட்டார்
  விடலையைக் கண்டு சொன்னா
ரேந்தலே பெரிது மொக்கு
  மிளமையும் வடிவு மிஃதே
போந்ததும் போய கங்குல்
  போம்வழிக் கண்ட துண்டேல்
யாந்தலைப் படுது மைய
  வறியினீங் குரைக்க வென்றார்.

   (இ - ள்.) வேந்தனால் விடுக்கப்பட்டார் விடலையைக் கண்டு சொன்னார் - தனபதி மன்னனால் ஏவப்பட்டோர் (வடிவை மாற்றிப் போதற்கு முயன்ற) சீவகனைக் கண்டு கூறினார்; ஏந்தலே பெரிதும் ஒக்கும் - ஏந்தலாகிய நின்னையே பெரிதும் ஒப்பான்; இளமையும் வடிவும் இஃதே - அவனுடைய இளமைப் பருவமும் வடிவமும் இத் தன்மையே; போந்ததும் போய கங்குல் - அவன் வெளிவந்ததும் சென்ற இரவிலேயே; போம் வழிக் கண்டது உண்டேல் யாம் தலைப்படுதும் - நீ போந்த நெறியிலே அவனைக் கண்டிருந்தால் (அவ்விடத்தைக் கூறினால்) யாங்கள் கண்டு கொள்வோம்; ஐய! அறியின் ஈங்கு உரைக்க என்றார் - ஐயனே! அறிந்திருந்தாற் கூறுக என்று வினவினர்.

 

   (வி - ம்.) 'போகின்ற இடத்து யாங்கள் அவனைக் கண்டதுண்டாயின் அப் பொழுதே சென்று தலைப்படுவேம்' என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர் அது வறுங்கூற்றாய் முடிதல் காண்க. அற்றேல், 'கண்டதுண்டேல்' எனவும், 'அறியின் ' எனவும் இருமுறை ஒரு பொருளையே தருஞ்சொற்கள் வந்தனவால் எனின், கண்டிருந்தால் அவ்விடஞ் சென்று தலைப்படுகிறோம்; ஆகவே, அறியின் உரைத்திடுக' என்றாராதலின் பயன் கருதியே இருமுறை வந்தன என்க.