பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 806 

னது; தௌ்ளு தீ கனியும் - ஆராய்ந்தெடுத்த இனிய பழமும் ஆகிய; சில தந்தபின் - இவற்றுள் சிலவற்றைக் கொடுத்த பின்னர்; வெள்ள மாரி அனாய் - நீர் பொழிகின்ற மேகத்தையொத்தவனே; விருந்து ஆர்க என - விருந்துண்பாயாகவென்று கூறி; உள்ள மாட்சியினார் - மனமாண்புடைய முனிவர்கள்; உவந்து ஓம்பினார் - மகிழ்ந்து பேணினார்.

 

   (வி - ம்.) அமுது : ஆகுபெயர். வெள்ளமாரியனாய் என்றது பலர்க்கும் பயன்படுபவனே என்றவாறு.

( 13 )
1425 பாங்கின் மாதவர் பான்மதி போன்றிவன்
வீங்கு கல்வியன் மெய்ப்பொருட் கேள்விய
னாங்கு நாமு மளக்குவ மென்றுதம்
மோங்கு கட்டுரை யொன்றிரண் டோதினார்.

   (இ - ள்.) பாங்கின் மாதவர் - நல்ல இடத்தில் உள்ள முனிவர்; இவன் பால்மதி போன்று வீங்கு கல்வியன் - இவன் முழுத் திங்கள் போலே எல்லாக் கலைகளும் நிறைந்த கல்வியன்; மெய்ப்பொருள் கேள்வியன் - உண்மைப் பொருளைக் கேட்டறிந்தவன்; ஆங்கு நாமும் அளக்குவம் என்று - இவனிடத்துள்ள அக் கல்வி கேள்விகளை நாமும் அளந்தறிவேம் என்று எண்ணி; தம் ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார் - தம் உயர்ந்த கட்டுரைகளில் ஒன்றிரண்டுரைத்தனர்.

 

   (வி - ம்.) பால்மதி - பால் போன்ற ஒளியையுடைய முழுத்திங்கள். ஒவ்வொரு கலையாக நாடோறும் வளர்ந்து நிரம்பிய திங்கள் ஒவ்வொரு கலையாகப் பயின்று நிரம்பிய சீவகனுக்க உவமை. மெய்ப்பொருள் - காரண காரியங்களிரண்டுமின்றி முடிவாய் நிற்கும் பொருள். அளக்குவம் : தன்மைப் பன்மை. கட்டுரை - பொருள் பொதிந்த மொழி.

 

   ஒன்றிரண் டென்பதொரு வழக்கு; ஒருசில என்பது கருத்து.

 

   பாங்கு - நல்லிடம்; 'பாங்கர்ப் பல்லி' (அகம் : 9) என்ப.

( 14 )
1426 ஐயர் கூறலு மண்ணலுங் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திர நீந்துவா
னுய்யு மேற்றொடர்ப் பாட்டினிங் கியாவையு
மெய்தி னார்களு முய்பவென் றோதினான்.

   (இ - ள்.) ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான் - அவர்கள் கூறுகின்ற அளவிலே சீவகனும் கூறுகின்றான்; சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான் உய்யுமேல் - கல்லைக் கழுத்திலே கட்டிக் கொண்டு கடலிடை நீந்துவோன் பிழைப்பான் என்றால்; இங்குத் தொடர்ப்பாட்டின் யாவையும் எய்தினார்களும் - இவ்வுலகிற் காம