பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 808 

   (இ - ள்.) எம் நெறி ஏமம் நல்நெறி - யாங்கள் நிற்கின்ற வழி நல்வழி; அல்நெறி தூய்மை இல்நெறி - இஃது ஒழிந்தன நீ கூறியவாறே தூய்மை இல்லாத வழி; யாமும் துணிகுவம் - அதனை நாங்களும் தெரிந்திருப்போம்; காமன் தாதை நெறியின் கண் - திருமால் கூறிய இவ்வழியிடத்தில்; தீமை உண்டு எனில் - தீங்கு உண்டாயின்; காளை நீ செப்பு எனச் செப்பினான் - காளையே! நீ கூறுக என்று அவர்கள் வினவ, அவனும் சொன்னான்.

 

   (வி - ம்.) ஏமம் - இன்பம். காளைபோல்வானைக் காளையென்றது ஆகுபெயர். அல்நெறி - இந் நெறியல்லாத பிற நெறிகள். காமன் தாதை - திருமால். காளை : விளி.

( 17 )

வேறு

 
1429 தூங்குறிக் கிடந்து காயும்
  பழங்களுந் துய்ப்ப நில்லா
பாங்கலா வினைக ளென்றார்
  பகவனா ரெங்கட் கென்னி
னோங்குநீண் மரத்திற் றூங்கு
  மொண்சிறை யொடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்க டுய்ப்பப்
  பழவினை பரியு மன்றே.

   (இ - ள்.) பகவனார் எங்கட்கு - திருமால் எங்களுக்கு; தூங்கு உறிக்கிடந்து காயும் பழங்களும் துய்யப்ப - தூக்கப்பட்ட உறிகளிலே இருந்து காயும் கனிகளும் உண்பதனால்; பாங்கு அலாவினைகள் நில்லா என்றார் என்னின் - நல்லவை அல்லாத வினைகள் நில்லா என்றுரைத்தார் என்றால்; ஒங்கும் நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல் - உயர்ந்து நீண்ட மரங்களிலே தொங்குகின்ற சிறந்த சிறகுகளையுடைய, ஒடுங்குமியல்புள்ள வெளவால்கள்; பாங்கரில் பழங்கள் துய்ப்பப் பழவினை பரியும் அன்றே - அருகில் உள்ள பழங்களைத் துய்ப்பதனால் அவற்றின் பழவினைகள் நீங்கும் அல்லவா?

 

   (வி - ம்.) சமயங்கள் கூறிய புற ஒழுக்கமாத்திரையானே பழவினைகள் கழியா என்பது இச் செய்யுளின் கருத்து.

 

   பழங்களையே உண்டு மரத்திலே தலைகீழாய்த் தொங்குதலானே வெளவால்களின் பழவினை தீர்தல் இல்லையானாற் போன்று இவ்வொழுக்கமாத்திரையாற் பிறப்பறாது என்றபடியாம். இது மாறுபட வந்த உவமத்தோற்றம்.

( 18 )