பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 811 

முடியா தன்றே (அதுபோல); பண் நிறக் கிளவியார் தம் பசையினால் பிறந்த பாவம் - பண்ணின் இயல்புற்ற மொழியாராகிய மகளிரின் ஆசையினால் உண்டான பாவத்தை; கண் நிற முலையினார் தம் கலவியால் கழிக்கலாமே - கண்களையுடைய ஒளிபொருந்திய முலையார்களின் சேர்கையினாலே போக்க முடியுமோ? (முடியாது.)

 

   (வி - ம்.) துகிலின் கட்பட்ட குருதிக்கறையைக் குருதியாலே மாற்றல் கூடாமைபோலப் பிறவிக்குக் காரணமாகிய பற்றாலேயே பிறவியை அறுக்க இயலாது என்பதாம். பிறப்பறுக்கலுற்றார் முலையினார் கலவியைத் தவிர்தல் வேண்டும் என்பது கருத்து.

( 22 )
1434 நுண்டுகில் வேத லஞ்சி
  நெருப்பகம் பொதிந்து நோக்கிக்
கொண்டுபோய் மறைய வைத்தாற்
  கொந்தழல் சுடாது மாமே
கண்டத்தி னாவி யார்தங்
  கடிமனை துறந்து காட்டுட்
பண்டைச்செய் தொழிலிற் பாவம்
  பறைக்குற்றாற் பறைக்க லாமே.

   (இ - ள்.) நுண் துகில் வேதல் அஞ்சி - நுண்ணிய ஆடைவேதற்கு அஞ்சி; நெருப்பு அகம் நோக்கிப் பொதிந்து - நெருப்பை ஆடையினுள்ளே பார்த்துவைத்து மூடி; கொண்டுபோய் மறைய வைத்தால் - கொண்டு சென்று மறைவான இடத்திலே வைத்தால், கொந்து அழல் சுடாதும் ஆமே - அப் பொங்கும் நெருப்புச் சுடாதும் விடுமோ?; கண்டத்தின் நாவியார் தம் கடிமனை துறந்து - கழுத்திலே புழுகை அணிந்த மகளிரின் காவலுறும் மனையை விட்டு நீங்கி; காட்டுள் பண்டைச் செய் தொழிலின் - காட்டிலே சென்று முன் செய்த கலவித் தொழிலையே கொண்டு; பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே - பாவத்தைப் போக்க நினைத்தாற் போக்கமுடியுமோ?

 

   (வி - ம்.) தொன்று தொட்டுப் பிறப்புக்கடோறுந் தொடர்ந்து வரும் செயல் என்பார், ”பண்டைச் செய்தொழில்” என்றான்.

 

   பறைக்கல் - தேய்த்தல். பறைதல் - தேய்தல். ”பார்வையாத்த பறைதாள் விளவின்” என்னும் பெரும்பாணாற்றுப்படையினும் (95) அஃதப்பொருட்டாதல் காண்க. சுடாதும் என்புழி, உம்மை, இசை நின்ற.

 

   மகளிரின் மனையைத் துறந்தகல (அவரை நெஞ்சாலே நோக்கிக்) காட்டிலே கொண்டுபோய் வைத்து, முன்பு செய்த தொழிலிற் பிறந்த பாவத்தைப் போக்கலுற்றாற், 'போக்க ஒண்ணாது' என்பர் நச்சினார்க்கினியர்.

( 23 )