பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 816 

1442 கரும்பணி வளவயற் காமர் தாமரை
வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செநெ
லரங்கணி நாடக மகளி ராய்நுதற்
சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே.

   (இ - ள்.) கரும்பு அணி வளவயல் - கரும்பை அணிந்த வளத்தையுடைய கழனியில்; காமர் தாமரை வரம்பு அணைந்து - அழகிய தாமரைமலர் சாய்ந்து வரம்பைச் சேர (இருக்க); அதன் நுதல்கிடந்த வார் செநெல் - அத் தாமரையின் நெற்றியிலே கிடந்த நீண்ட செந்நெற் கதிர்; அரங்கு அணி நாடகமகளிர் ஆய்நுதல் - அரங்கிலே அணிந்துவந்த நாடக மகளிரின் அழகிய நெற்றியிலே; சுரும்புசூழ் இலம்பகத் தோற்றம் ஒத்தது - வண்டுகள் சூழ்ந்த தலைக்கோலம் என்னும் அணியின் தோற்றம் போன்றது.

 

   (வி - ம்.) அதன் - அத்தாமரை மலரினது. இலம்பகம் - தலைக்கோலம் என்னும் ஓரணிகலம். வார்செநெல் - என்புழி நகரமெய் விகாரத்தாற் கெட்டது.

 

   அணைந்து - அணைய : எச்சத்திரிபு. சுரும்பு தாமரைமலரைச் சூழ இருக்கும். அவ்வாறே தலைக்கோலத்தை சூழக் கூந்தல் இருக்கும். வரம்புக்கு அரங்கு உவமை.

( 31 )
1443 வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமே
னண்டுகி ருற்றென நடுங்கி நாணினால்
விண்டொளித் தூண்டுறந் தொடுக்கும் வீழ்புனல்
கொண்டபூங் கிடங்கணி நகரம் கூறுவாம்.

   (இ - ள்.) வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமேல் - வண்டுகள் உறையும் வளைந்த துறையிலே கன்னியாகிய வாளையின் மேல்; நண்டு உகிர் உற்றென நடுங்கி - நண்டின் நகம்பட்டதாக, அதனால் நடுக்கமுற்று; நாணினால் விண்டு ஒளித்து ஊண்துறந்து ஒடுங்கம் வீழ்புனல் - நாணத்தினால் அவ்விடத்தைவிட்டு உணவே வெறுத்து ஒடுங்கியிருக்கும் ஆழ்ந்த நீரை; கொண்ட பூங்கிடங்கு அணி நகரம் கூறுவாம் - தன்னிடத்தே கொண்ட அகழிசூழ்ந்த நகரத்தை இனி இயம்புவோம்.

 

   (வி - ம்.) ஒரு கன்னி தன்மேலே உகிர் உற்றதனால் நாணத்தினால் நடுங்கி, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று ஒளித்து ஊணைத்துறந்து ஓடுங்குமாறு போல என வாளைக்கு உவமை கொள்க.

 

   ”வரியகட் டலவன் வள்ளுகிர் உற்றெனக் கன்னிவாளை உண்ணா தொடுங்கும் தண்பணை” என்றார் கதையினும் (1 - 89 : 100 - 2.)

( 32 )