பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 819 

வேறு

 
1448 கேமமா புரமெனுங் கேடி னல்லிசைப்
பூமிமேற் றிலகம்வைத் தனைய பொன்னகர்த்
தாமம்நீ ணெடுங்குடைத் தரணி காவல
னாமம்வே னரபதி தேவ னென்பவே.

   (இ - ள்.) பூமிமேல் திகலம் வைத்தனைய - உலகிற்குத் திலகம் இட்டால் ஒத்த; கேமமாபுரம் எனும் கேடுஇல் நல் இசைப் பொன்நகர் - கேமமாபுரம் எனும் பெயரிய கெடுதல் இல்லாத நல்ல புகழையுடைய பொன்னகரிலே; தாமம்நீள் நெடுங்குடைத் தரணி காவலன் - மாலையணிந்த நீண்ட குடையை உடைய உலக காவலன்;' நாமம் வேல் நரபதிதேவன் என்ப - அச்சமூட்டும் வேலேந்திய நரபதிதேவன் என்னும் பெயரையுடையோன் என்பார்கள்.

 

   (வி - ம்.) நல்லிசையை நரபதி தேவனுக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர்.

( 37 )
1449 அந்நகர்க் கரசனே யனைய வாண்டகை
மெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன்
கைந்நிக ரமைந்தவேற் கமழுந் தாரினான்
மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான்.

   (இ - ள்.) அந் நகர்க்கு அரசனே அனைய ஆண்தகை - அந்த நகரத்திற்கு அரசனே போலும் ஆண்தகையினான்; மெய் நிகர் இலாதவன் - வடிவம் ஒப்பிலாதவன்; வேதவாணிகன் - மறைவழி ஒழுகும் வணிகன்; கைந்நிகர் அமைந்த வேல் கமழும் தாரினான் - கைக்கு நிகராக அமைந்த வேலும் மணஞ்செயும் மாலையும் உடையான்; மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான் - மைதீட்டிய தம்முள் நிகர்த்த குளிர்ந்த கண்களையுடைய மகளிர் மயக்க அவர்களின்பத்தே தங்குவான்.

 

   (வி - ம்.) இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்.

 

   அரசன் : நரபதிதேவன். ஆண்மைத் தன்மையில் அரசனையே ஒத்தவன் என்றவாறு.

 

   ஆற்றலுடைய கையும், அதற்குத் தகுந்த வேலும் இவற்றால் எய்திய வெற்றி மாலையினையும் உடையோன் என்றவாறு.

 

   மழைக்கணார் மருட்ட வைகுவான் என்றது அவனுடைய வாழ்க்கைச் சிறப்பினை விதந் தோதியபடியாம்.

( 38 )