பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 832 

நாணும் உடைந்தன - மாமையும் உள்ளிருந்த நிறையும் நாணும் கேட்டன; வேட்கையும் ஒள்நிறத் தீ வினைத்தாள் உருக்கு உற்றாள் - அவாவையும் ஒளிரும் தீயென விளைவித்துக் கொண்டாள்; தானும் அத் தீயாலே உருக்குண்டாள்.

 

   (வி - ம்.) உண்ணிறையும் நாணம் : வினைத்தொகை.

( 61 )
1473 வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவ
ணோக்கணங் காய்மன நோய்செய நொந்தவன்
வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர்
தாக்கணங் கோமக ளோனெத் தாழ்ந்தான்.

   (இ - ள்.) வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு - திருத்தமுற்ற தெய்வத்தன்மை நிறைந்த அழகிய யாழ் வல்ல சீவகனுக்கு; அவள் நோக்கு அணங்காய் மனநோய் செய - அவள் நோக்கம் வருத்தமாய் மனத்தை நோய் செய்தலாலே; அவன் நொந்து - அவன் வருந்தி; வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடுந்தோளி - கச்சினால் இறுக்கப்பட்டு வருத்தம் நிறைந்த முலையினையும் வேய் போன்ற நீண்ட தோளினையும் உடையாள்; ஓர் தாக்கு அணங்கோ மகளோ எனத் தாழ்ந்தான் - தாக்கி வருத்தும் ஒரு தெய்வ மகளோ மானிட மகளோ என ஐயுற்றுக் குறைந்தான்.

 

   (வி - ம்.) வாக்கு - திருத்தம். வாக்கணங்கு என்று கொண்டு நாமகள் எனினுமாம். இனி, அணங்கு என்றற்கு வீணைக்குரிய மாதங்கி என்னும் தெய்வம் எனினுமாம். இது நச்சினார்க்கினியர் கொள்கை. சீவக 550 ஆம் செய்யுளையும் உரையையும் காண்க.

 

   தாக்கு அணங்கு : திருமகள் என்பர் நச்சினார்க்கினியர்.

( 62 )
1474 நல்வளத் தாமரை நாணிய வாண்முகக்
கொல்வளர் வேற்கணி னாள்குழைந் தாளெனச்
சொல்வளர்த் தாரவ டோழியர் சோர்குழன்
மல்வளர் மார்பனை வந்து வளைந்தார்.

   (இ - ள்.) நல்வளம் தாமரை நாணிய வாண்முகம் - நல்ல வளமிகும் தாமரை மலர் வெள்கிய ஒளியுறும் முகத்திலே; கொல்வளர் வேற்கணினாள் குழைந்தாள் என - கொல்லுந் தொழிலிற்கிடந்த வேலைப்போன்ற கண்ணாள் வருந்தினாள் என்று; சோர்குழல் அவள் தோழியர் சொல் வளர்த்தார் - சோர்ந்த குழலையுடைய கேமசரியின் தோழிகள் சொல்லைப் பரப்பியவராய்; மல்வளர் மார்பனை வந்து வளைந்தார் - மல்லிலே மேம்பட்ட மார்பின்னாம் சீவகனை வந்து சூழ்ந்தனர்.

 

   (வி - ம்.) சோர்குழல் அவள் எனக் கூட்டுக.

( 63 )