பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 850 

திறப்பதை அறியா வகையிலே கதவைத் தள்ளி; மெல்லவே திறந்து நீக்கி - மெல்லத் தாழ் திறந்து பின்னர் முற்றுந் திறந்து; கொழுநிதி மாடம் நீந்தி - வளமிகு செல்வமுடைய மாடத்தைக் கடந்து; பல்கதிர்ப் பரிதிபோல - பல கதிர்களையுடைய ஞாயிறு போல; மின்னுவிட்டு இலங்கு பைம்பூண் கொல் சின மடங்கல் அன்னான் - ஒளிவீசி விளங்கும் புத்தணியையுடைய கொல்லும் சீற்றமுறும் சிங்கம் போன்றவனான சீவகன்; பாய் இருள் ஏகினான் - பரவிய இருளிலே சென்றான்.

   (வி - ம்.) அல்லியுட்பாவை : திருமகள். அல்லி : தாமரை மலர்க்கு ஆகுபெயர். ஒற்றுதல் - தள்ளுதல்.

( 94 )
1506 தாளுடைத் தடங்கொள் செவ்வித்
  தாமரைப் போது போலும்
வாளுடை முகத்தி னாடன்
  வருமுலைத் தடத்தின் வைகி
நாளினும் பெருகு கின்ற
  நகைமதி யனைய காதற்
கேள்வனைக் கனவிற் காணாள்
  கிளர்மணிப் பூணி னாளே.

   (இ - ள்.) கிளர்மணிப் பூணினாள் - விளங்கும் மணிகள் இழைத்த கலனணிந்தவளாகிய; தடம்கொள் செவ்வித் தாளுடைத் தாமரைப் போது போலும் வாளுடை முகத்தினாள் - குளத்திலே தங்கிய செவ்வியுடைய, தண்டையுடைய தாமரை மலர்போல விளங்கும் முகத்தினாள்; தன் வருமுலைத் தடத்தின் வைகி - தன் வளரும் முலைகளின்மேல் தங்கி; நாளினும் பெருகுகின்ற நகைமதி அனைய காதல் கேள்வனை - நாடோறும் வளர்கின்ற பிறைமதி போன்ற காதலையுடைய கணவனை; கனவில் காணாள் - கனவிலே காணாதவளானாள்.

   (வி - ம்.) இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் ”கனாக் காண்கின்றவள் அவன் போகக் கண்டாள்” என்று கூறியுள்ள குறிப்பு நன்கு விளங்கவில்லை. துயில்கின்றபொழுது நாள்தோறுங் கனவிலே தன்றோள் மேல் கேள்வனைக் காணுமியல்புடைய கேமசரி அன்று கனவின் கண் அவ்வாறு காணாதவளாயினள் என்பது நூலாசிரியர் கருத்தாதல் கூடும் என்று தோன்றுகின்றது.

   அவ்வாறு காணாதவள் எனவே கனவில் அவன் போகக் கண்டாள் என்பது குறிப்பாகும் என்று நச்சினார்க்கினியர் கொண்டனர் போலும். நகை - ஒளி. மதி - சந்திரன். மதி என்பது ஈண்டுப் பிறையையுணர்த்திற்று, பிறையானது நாளுக்குநாள் வளர்வது போல வளர்கின்ற காதல் என உவமைக்குப் பொருத்தம் கூறவேண்டியிருப்பதால்.

( 95 )