பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 854 

   (இ - ள்.) தேன்விண்டு துளிக்கும் விரைத் தாரினாய் - தேன் பிதிர்வுற்றுத் துளிக்கும் மணமாலையாய்!; இவள் தொண்டைவாய் தொய்யில் வனமுலை கண்டு - இவளுடைய தொண்டைவாயையும் தொய்யில் எழுதிய அழகிய முலையையும் கண்டு; தேவர் கனிப என்று ஏத்துவாய் - வானவரும் உளம் நெகிழ்வர் என்று முன்னிலைப் புறமொழியாகப் புகழ்மொழி கூறுகின்றவனே!; வண்டு கூறியவண்ணம் அறிந்திலேன் - நீ வண்டைப் பார்த்துக் கூறிய தன்மையை யான் அறிகிலேன்; (அறிந்திருந்தால் நின்னைப் பிரியவிடேன்.)

   (வி - ம்.) தேவர் என்பதற்கு அயனார் என்றும், அவர், 'உலகைப் படைக்கும் நாமே உலகை அழிக்கும் ஓருருவையும் படைத்தோமே' என்று வருந்துவர் என்றும், தேவர் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி என்றும், 'தெய்வமகளிர்' என்று கொண்டு 'வாயையும் முலையையுங்கண்டு அவர்கள் வருந்துவார் எனினும் ஆம்' என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர்.

   தேவர் என்புழி, சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

   வண்டு - வண்டிற்கு. பெண்ணாகலின் என்பேதைமையால் அதனையான் அறிந்திலேன் என்றிரங்கியவாறு.

   வண்டு கூறியவண்ணம் என்றது வண்டிற்குக் கூறுமாற்றால் குறிப்பாகப் பிரிவுணர்த்தியதனை.

   அறிந்திலேன் என்றது அறிவனேல் நின்னைப் பிரியவிட்டிரேன் என்பதுபட நின்றது.

( 102 )

வேறு

1514 முலைவைத் ததடத் திடைமுள் கலுறிற்
றலைவைத் துநிலத் தடிதை வருவாய்
சிலைவித் தகனே தெருளே னருளா
யுலைவித் தனையென் னுயிர்கா வலனே.

   (இ - ள்.) சிலை வித்தகனே - வில் வல்லோனே!; உயிர் காவலனே - என் உயிருக்குக் காவலனே!; முலைவைத்த தடத்திடை முள்கலுறின் - என் முலைகளிடையே நீ ஊடல் தீர்த்துக் கூட நினைப்பின்; நிலத்துத் தலைவைத்து அடி தைவருவாய் - நிலத்திலே நின் தலையைப் பொருத்தி என் அடிகளைத் தடவுவாய்; உலைவித்தனை என் தெருளேன் - இப்போது சலிப்பித்தனை ஏனோ? காரணம் தெளிகின்றிலேன்; அருளாய் - தெளியக் கூறுவாய்.

   (வி - ம்.) வேலியே பயிரை மேய்ந்தாற் போன்று உயிர்காவலனாகிய நீயே உலைவித்தனை என்னும் நயம் உணர்க.

   'வைத்த நிலம்' என்பது பாடமாயின் காலை வாங்கினால் அந் நிலத்தில் அடிச்சுவட்டைத் தடவுவாய் என்க. முள்கல் - முயங்குதல்.