| கேமசரியார் இலம்பகம் |
860 |
|
|
| 1525 |
வெறிமா லைகள்வீழ்ந் துநிலம் புதையப் | |
| |
பொறிமா லைபுனை நிழல்கா ணலளாய் | |
| |
நெறிநா டியபோ யினணீ டினள்கண் | |
| |
டெறிவால் வளைகொண் டுவரும் மினியே. | |
|
|
(இ - ள்.) வெறிமாலைகள் வீழ்ந்து நிலம் புதைய - தன் முடியில் அணிந்த மணமுறும் மாலைகள் வீழ்ந்து கண்ணீரையுடைய நிலம் மறைதலின்; பொறி மாலைபுனை நிழல் காணலளாய் - ஊழை இயல்பாகவுடைய கேமசரி, அந் நிழலாகிய தோழியைக் காணதவளாய், எறி வால் வளை - ஒளிவீசும் வெள்வளையாள்; நெறி நாடிய போயினள் நீடினள் - அவன் போனவழியைத் தேடுதற்குப் போயினாள், நீட்டிக்கவுஞ் செய்தாள்; இனி கொண்டுவரும் - இனி அவனைக் கண்டு அழைத்து வருவாள்.
|
|
(வி - ம்.) 'எறி வால் வளை' என்பதற்கு 'அறுக்கப்படும் வெள்வளை' என்றும் உரைக்கலாம். 'அவள் அவனைக் கண்டு வளைகொண்டுவருவாள்' என்றும் 'எனவே அவனைத்தான் கொண்டு வரும் என்றாளாம்' என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர்.
|
( 114 ) |
| 1526 |
மடமா மயிலே குயிலே மழலை | |
| |
நடைமா ணனமே நலமார் கிளியே | |
| |
யுடனா டுமெனை யனையென் றுருகாத் | |
| |
தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே. | |
|
|
(இ - ள்.) தொடை யாழ் மழலை மொழி - இனிய நரம்பினையுடைய யாழ்போலும் மழலைமொழியான்; மடமா மயிலே - இளமை பொருந்திய மயிலே!; குயிலே - குயிலே!; மழலை நடை மாண் அனமே - இளமைபொருந்திய நடையினால் மேம்பட்ட அன்னமே!; நலம் ஆர் கிளியே - அழகு பொருந்திய கிளியே!; உடன் ஆடும் என் ஐயனை என்று - என்னுடன் விளையாடும் என் தலைவனை என்றுரைத்து, (அவ்வளவிலே); உருகாச் சோர்ந்தனள் - உருகி அவற்றிற்குக் கூறுங் காரியத்தை மறந்தாள்.
|
|
(வி - ம்.) 'ஐயனை' என்பதற்குத் 'தேடுமின்' என்னும் வினை வருவிக்க என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
மயில் சாயலானும் குயில் இசையானும் அன்னம் நடையானும் கிளி சொல்லானும் தன்னோடு உறவுடையனவாதலால் ஐயனை உடனே சென்று தேடுமின் என்று கூறிச் சோர்ந்தாள் எனினுமாம். இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை மாறுபட்டது எனினும் மிகவும் இனிமையுடையதாம். முதலடியில் 'மழலை' என்பது இளமையை யுணர்த்தியது. கடையடியில் உள்ள மழலை என்பது திருந்தாத என்னும் பொருளையுணர்த்திற்று. உருகா என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உருகி என்று பொருள்படும். தொடை -தொடுக்கப்பட்டது நரம்பு.
|
( 115 ) |