பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 866 

   முன்னும் தவப்பயனாகவே இவனை எய்தினை; அத் தவப்பயன் கெடா வியல்பிற்றாகலின் மீண்டும் நீ அவனை எய்துல் ஒருதலை என்பது கருத்து.

( 123 )
1535 பிறங்கின கெடுங்கள் யாவும்
  புணர்ந்தவர் பிரிவர் பேசி
னிறங்கின வீழு மேலா
  யோங்கிய வெண்ணில் யோனிப்
பிறந்தவர் சாவர் செத்தார்
  பிறப்பவே யென்ன நோக்கிக்
கறங்கிசை வண்டு பாடுங்
  கோதைநீ கவல லென்றாள்.

   (இ - ள்.) கறங்கு இசை வண்டுபாடும் கோதை - ஒலிக்கும் இசையுடன் வண்டுகள் முரலும் மலர் மாலையாய்!; பிறங்கினகள் யாவும் கெடும் - மிக்க வனப்புக்கள் யாவும் ஒருகாற் கெடும்; புணர்ந்தவர் பிரிவர் - கூடியவர் பிரிவர்; பேசின் - ஆராய்ந்தால்; மேலாய் ஓங்கிய இறங்கிய வீழும் - மேலாக வளர்ந்தன தாழ்ந்து வீழும்; எண்ணில் யோனிப் பிறந்தவர் சாவர் - கணக்கற்ற பிறவிகளிற் பிறந்தவர் இறப்பர்; செத்தார் பிறப்பவே என்ன நோக்கி - இறந்தவர் பிறப்பர் என்று இன்பமுந் துன்பமும் மாறிமாறி வருமென ஆராய்ந்து; நீ கவலல் என்றாள் - நீ கவலைப்படுவதை விடுக என்றுரைத்தாள்.

   (வி - ம்.) 'புணர்ந்தவர் பிரிவர்' என்பதைப் 'பிரிந்தவர் புணர்வர்' என மாற்றி இறுதியில் தந்து, 'அங்ஙனங் கெட்டாலும், பிரிந்தவர்கள் எல்லோரும் புணர்வரே யென்று பார்த்து நீ கவலாதே' என்று முடிப்பர் நச்சினார்க்கினியர்.

   மேலும் நீ இவ்வுலகியற்கையினை உணர்ந்து ஆற்றியிருத்தலும் வேண்டும் என்றிதனால் ஆற்றுவிக்கின்றனள் என்க.

   பிறங்கினகள் யாவும் என இயைக்க. கள் : விகுதிமேல் விகுதி.

( 124 )
1536 எரிதலைக் கொண்ட காமத்
  தின்பநீர்ப் புள்ளி யற்றாற்
பிரிவின்கட் பிறந்த துன்பம்
  பெருங்கட லனைய தொன்றா
லுருகிநைந் துடம்பு நீங்கி
  னிம்மயோ டும்மை யின்றி
யிருதலைப் பயனு மெய்தா
  ரென்றுயாங் கேட்டு மன்றே.