பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 868 

1538 பஞ்சிறை கொண்ட பைம்பொற்
  கலைபுறஞ் சூழ்ந்து வைத்து
நஞ்சிறை கொண்ட நாகப்
  படம்பழித் தகன்ற வல்குல்
வெஞ்சிறைப் பள்ளி யாக
  விழுமுலைத் தடத்து வைகத்
தஞ்சிறைப் படுக்க லாதார்
  தம்பரி வொழிக வென்றாள்.

   (இ - ள்.) பஞ்சு இறைகொண்ட பைம்பொன்கலை புறம் சூழ்ந்து வைத்து - துகில் தங்கிய புதிய பொன்மேகலையைப் புறத்தே சூழவைத்து; நஞ்சு இறைகொண்ட நாகப் படம் பழித்து அகன்ற அல்குல் - நஞ்சு தங்கிய அரவின் படத்தைப் பழித்துப் பரந்த அல்குலை; வெஞ்சிறைப் பள்ளியாக - வெவ்விய சிறையிடமாகக் கொண்டு; விழுமுலைத் தடத்துவைக - சிறந்த முலைத்தடத்திலே தங்குமாறு; தம் சிறைப்படுக்கலாதார் - தம் சிறையிலே கணவரை அகப்படுக்க அறியாத மகளிர்; தம் பரிவு ஒழிக என்றாள் - பிரிவின்கண் தாம் வருந்துவதை விடுக என்றாள்.

   (வி - ம்.) இது கேமசரி தன்னிலே கூறி ஆற்றியது. தாய்க் கூற்றென்பாரு முளர்.

   பஞ்சு : ஆகுபெயர்; ஆடை என்க. கலை - மேகலை என்னுமோரணி கலன். இறைகொண்ட - தங்கிய. இதனைக் கேமசரி கூற்றாகக் கொள்ளலே சிறப்பு.

( 127 )
1539 வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்
பாசத்தா லாக்கப் பட்ட வாவிய ளல்ல தெல்லாம்
பேசினார் பிணையன் மாலை பிசைந்திடப் பட்ட தொத்தா
டூசுலாம் பரவை யல்குற் றூமணிப் பாவை யன்னாள்.

   (இ - ள்.) தூசு உலாம் பரவை அல்குல் தூமணிப் பாவை அன்னாள் - ஆடை தங்கிய பரவிய அல்குலையுடைய தூ மணிப் பாவையைப் போன்றவள்; வாசம் மிக்குடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்றப் பாசத்தால் - மணம் மிகவுடைய மாலையான் வண்டுக்குக் கூறிய மொழியாகிய கயிற்றாலே; ஆக்கப்பட்ட ஆவியள் - கட்டுண்ட உயிரொன்றையுமே உடையாள்; அல்லது எல்லாம் பேசின ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் - அவ்வுயிரொழிய உடம்பு முழுவதும் நாம் சொல்லிற்பிசைந்து போகட்டதொரு கட்டு தலையுடைய மாலையை ஓத்தாள்.