பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 891 

 

   (இ - ள்.) வழையொடு மரவ நீழல் - சுரபுன்னையுடன் கூடிய மரவமரத்தின் நீழலிலே; மணிமலர் நாகம் சார்ந்து துணிவருஞ் சாயல் நின்றாள் - மணிபோலும் மலரையுடைய நாகத்தைச் சார்ந்து யாவளென உறுதி கூற வியலாத மென்மையுடையாள் நின்றாள்; அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும் - (அவளுடைய) பூண்களின் ஒலியாலும் அமிழ்தனைய மணத்தினாலும்; தோன்றல் - சீவகன்; பணிவருஞ் சிங்கநோக்கின் பணையெருத்து உறழ நோக்கி - தாழ்வகன்ற தன் சிங்க நோக்கினாலே பருத்த கழுத்தைத் திரும்பிப் பார்த்து; தன் கண்ணின் கண்டான் - தன் கண்களாலே அவளைக் கண்டான்.

   (வி - ம்.) கண்ணின் எனவே, மனம் பொருத்த நோக்கிற்றிலன் என்க. துணிவருஞ்சாயல்; தெய்வமோ அல்லளோ என்று துணிதலரிய சாயல்.

( 13 )
1570 கண்டவன் கண்ணி னோக்க
  நடுங்கித்தன் காதிற் றாழ்ந்த
குண்டலஞ் சுடர வொல்கிக்
  கொடிநடுக் குற்ற தொப்ப
நுண்டுகிற் போர்வை சோர
  நுழைமழை மின்னி னிற்ப
வெண்டிசை மருங்கு நோக்கி
  யியக்கிகொ லிவண்மற் றென்றான்.

   (இ - ள்.) கண்டவன் கண்ணின் நோக்க - பார்த்தவன் காமக் குறிப்பின்றிக் கண்ணால் நோக்குதலின் ; நடுங்கி -உள்ளம் நடுங்கியதால்; கொடி நடுக்குற்றது ஒப்ப - பூங்கொடி நடுங்கியது போல; தன் காதில் தாழ்ந்த குண்டலம் சுடர ஒல்கி - தன் காதில் தூங்கிய குண்டலம் ஒளிர் அசைந்து; நுண் துகில் போர்வை மழை நுழை மின்னின் நிற்ப - மெல்லிய ஆடையாகிய போர்வை நெகிழ அதன் நடுவே முகிலில் நுழையும் மின்போல