பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 912 

வேறு

1602 மெழுகு செய்படம் வீழ்முகின் மத்தகத்
தொழுகும் வெள்ளரு வித்திர ளோடைசூழ்ந்
திழுகு பொன்மதத் தின்வரைக் குஞ்சரந்
தொழுது வேய்முதற் றூசங்கொண் டேறினான்.

   (இ - ள்.) வீழ்முகில் மெழுகு செய்படம் - படிந்த முகிலாகிய மெழுகினாற் செய்த முகபடத்தையும்; ஒழுகும் வெள் அருவித்திரள் மத்தகத்து ஓடை சூழ்ந்து - ஒழுகுகின்ற வெள்ளிய அருவித் திரளாகிய நெற்றிப்பட்டமும் சூழ்ந்து; இழுகு பொன் மதத்தின் - ஏறுவாருடைய காலைச் சூழ்ந்துகிடந்து, உரிஞ்சும் பொன்னாகிய மதத்தினையும் உடைய ; வரைக்குஞ்சரம் தொழுது - மலையாகிய யானையைத் தொழுது; வேய் முதல் தூசம்கொண்டு ஏறினான் - மூங்கில் வேராகிய புரோசைக் கயிற்றைப் பிடித்து (அம் மூங்கில் கவையிலே அடியிட்டு) ஏறினான்.

   (வி - ம்.) அருகன் கோயில் அம் மலையில் இருப்பதால் தொழுதான். யானை ஏறுவாரும் தொழுதல் இயல்பு.

( 46 )
1603 நிரைத்த தீவினை நீங்க நெடுங்கணார்
வரைக்க ணேறலின் வாலரிப் பொற்சிலம்
புரைத்து மின்னிருண் மேற்கிடந் தாலுமொத்
தரைத்த லத்தக மார்ந்ததொர் பாலெலாம்.

   (இ - ள்.) நிரைத்த தீவினை நீங்க - இடைவிடாத தம் தீவினை கெடும்படி வணங்க ; நெடுங்கணார் வரைக்கண் ஏறலின் - நீண்ட கண்களையுடைய மங்கையர் அம் மலைக்கண் ஏறுவதால்; வால் அரிப் பொன் சிலம்பு உரைத்து - தூய பரல்களையுடைய பொன்னாலாகிய (அவரடியில் அணிந்த) சிலம்புகள் உரைக்கப்பட்டு ; மின் இருள்மேல் கிடந்தாலும் ஒத்து - மின் இருளின் மேற் கிடந்த தன்மையும் ஒத்து; அரைத்த அலத்தகம் ஆர்ந்தது ஒர்பால் எலாம் - அம்மகளிரடி மதித்தலாற் செம்பஞ்சுக் குழம்பும் நிறைந்தது ஒரு பக்கமெல்லாம்.

   (வி - ம்.) அரைத்த அலத்தகம் : அகரம் தொகுத்தல் விகாரம்.

   நெடுங்கணார் என்றது மகளிர் என்பது படநின்றது. வால் - தூய. அரி - பரல். உரைத்து - உரைக்கப்பட்டு. மின் பொன்னுரைக்கும் இருள் மலைக்கும் உவமைகள். அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.

( 47 )
1604 சாந்துங் கோதையுந் தண்ணறுஞ் சுண்ணமு
மாய்ந்த பூம்புகை யும்மவி யுஞ்சுமந்
தேந்து பொன்விளக் கேந்தி யிடம்பெறா
மாந்தர் சும்மை மலிந்ததொர் பாலெலாம்.