பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 920 

தான் உரையாடினாய் (ஆதலால்); ஈங்கு தவிர் என - இவ்விடத்தே தங்குக என்றுரைக்க; பொன் நகர்ப் புக்கபின் அறிவல் - அழகிய நகரிலே புகுந்தபின் நின்னைப் பார்ப்பேன்; போக என்றான் வில் மெரீஇ வாங்கிய வீங்கு தோளினான் - (இப்போது) செல்க என்றுவில் பயின்று வளைத்த பருத்த தோளையுடையான் கூறினான்.

   (வி - ம்.) அறிவல் : மறுத்தற் பொருளதாய் விடை பயந்தது.

   அன்னதே என்றது ஆம் யான் புதியனே என்றபடி. அடிசிற்காலம் - உண்ணுங்காலம். என்னொடு பேசினாய் என்பது நீ புகாக்காலைப் புக்கெதிர்ப் பட்டனையாகலின் நின்னை விருந்தினனாக ஏற்றுக்கோடல் என் கடமையாம் என்பதுபட நின்றது. போகு - போவேன் எனினுமாம். தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று.

( 64 )
1621 புணர்மருப்பி யானையின் புயல்கொண் மும்மத
மணமகள் கதுப்பென நாறு மாநகர்த்
துணைமலர்க் கண்ணியுஞ் செம்பொன் மாலையு
மிணைமலர்த் தாரினா னிடறி யேகினான்.

   (இ - ள்.) புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம் - இணை மருப்புக்களையுடைய யானையின் முகில் பொழிதலைப் போன்ற மும்மதம்; மணமகள் கதுப்பு என நாறும் மாநகர் - மணப்பெண்ணின் கூந்தலைப்போல மணக்கும் பெரிய நகரிலே; துணைமலர்க் கண்ணியும் செம்பொன் மாலையும் இடறி - கட்டப்பட்ட மலர்க் கண்ணியையும் பொன் மாலையையும் இடறியவாறு; இணைமலர்த் தாரினான் ஏகினான் - இணைத்த மலர் மாலையானாகிய சீவகன் சென்றான்.

   (வி - ம்.) இடறி : நிகழ்காலம் உணர்த்தியது.

   புணர்மருப்பு : வினைத்தொகை. கதுப்பு - கூந்தல். துணைமலர் : வினைத்தொகை. கண்ணி - ஒருவகை மாலை.

( 65 )
1622 வண்டுகொப் புளித்துணு மாலை மார்பனைக்
கண்டுவப் பளித்தவர் கடைக்க ணேக்கற
மண்டபப் பளிக்கறை மருங்கொர் மாநிழல்
கொண்டவற் களித்ததோர் குளிர்கொள் பொய்கையே.

   (வி - ம்.) வண்டு கொப்புளித்து உணும் மாலை மார்பனை - வண்டுகள் தேனைக் கொப்புளித்துப் பருகும் மாலையணிந்த மார்பனை; கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற - பார்த்து மனத்திற்கு மகிழ்ச்சியளித்த மகளிரின் அக் கடைக் கண்கள் பின்பு அவனைக் காணாமையின் இளைத்து இடைய; மண்டபப் பளிக்கறை மருங்குஓர் மாநிழல் - மண்டபம்போலும்