பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 930 

கிளை என்றாற்கு - யாமெல்லாம் நின்னுறவினர் என்று கூறியவற்கு; ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து - அவ்விடத்திற் கூறிய முகமனுரையின் பன்மையை யெல்லாம் சீவகனும் ஒப்புக்கொண்டு; ஆங்கு அமைக என்றான் - இனி இம் முகமனை யெல்லாம் மொழியற்க என்றான்.

   (வி - ம்.) பூங்கழலான் : சீவகன். இவனை எதிர்ப்படுதலின் விசயனைப் புண்ணிய நம்பி என்றார். ஈங்கு - இங்ஙனம் நட்புக்கொண்ட விடத்து என்பதுபட நின்றது. இது நின்னாடு - இந்நாடு நின்னாடு. பதி - ஊர். இது நின்னில் என்க. யாங்களெல்லாம் நின்கிளை என வருவித் தோதுக. அதுவெல்லாம் - எல்லாம் எஞ்சாப் பொருண்மைத்து கடலெல்லாம் வற்றிற்று என்புழிப்போல.

( 83 )

வேறு

1640 மன்னவன் சிறுவ னாங்கோர் மாங்கனி யுண்ண லுற்று
மின்னவிர் கணையிற் பல்காற் பிழைப்பெய்து மீண்டு நிற்பப்
பொன்னவிர் கழலி னானப் பொருசிலை கணையின் வாங்கி
யின்னமிர் தூறு கின்ற விருங்கனி யறவெய் திட்டான்.

   (இ - ள்.) மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர் மாங்கனி உண்ணல் உற்று - அரசன் மகனாகிய விசயன் அப்பொழிலிடையுள்ள ஒரு மாங்கனியை உண்ண விரும்பி; மின் அவிர் கணையின் பல்கால் பிழைப்ப எய்து மீண்டு நிற்ப - ஒளி விடும் அம்பினாலே பலமுறை குறி தவறுமாறு எய்து, மாங்கனி உண்ணும் நினைவை விடுத்து நிற்ப; பொன் அவிர் கழலினான் - பொன்னாற் செய்த விளங்கும் வீரகண்டை புனைந்தவன் ஆகிய சீவகன்; அப் பொருசிலை கணையின் வாங்கி - அப் போருக்குரிய வில்லை அம்புடன் வாங்கிக்கொண்டு; இன் அமிர்து ஊறுகின்ற இருங்கனி அற எய்திட்டான் - இனிய அமிர்தம் ஊற்றெடுக்கும் பெரிய கனியை விழுமாறு எய்தான்.

   (வி - ம்.) மன்னவன் சிறுவன் : விசயன். உண்ணல் உற்று - உண்ண விரும்பி. பிழைப்ப வெய்து எனற்பாலது பிழைப்பெய்து என நின்றது. கழலினான் : சீவகன். சிலை - வில். இருங்கனி - பெரிய பழம்.

( 84 )
1641 எய்தவக் கணையு மாவி
  னிருங்கனி யதுவும் பூமிக்
கெய்தவச் சிலையி னெல்லை
  யணுகலு மேந்த னோக்கி
யெய்தவவ் விடத்து நின்றே
  யெய்தவத் தடக்கை கொண்டாற்
கெய்தச்சென் றைய னாரத்
  தழுவிக்கொண் டிதனைச் சொன்னான்.