பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 931 

   (இ - ள்.) எய்த அக் கணையும் மாவின் இருங்கனி யதுவும் - சீவகன் விடுத்த அந்த அம்பும் மாமரத்தில் உள்ள பெரியகனியும்; எய்த அச் சிலையின் எல்லை பூமிக்கு அணுகலும் - தான் அம்பை விடுத்த அவ் வில்லின் உயரத்திலே பூமிக்கண் அணுகின அளவிலே; ஏந்தல் நோக்கி - சீவகன் அதனைக் கண்டு; எய்த அவ்விடத்து நின்றே எய்த அத் தடக்கை கொண்டாற்கு - அம்பினை ஏவிய அங்கு நின்றே ஏவிய அப் பெரிய கையினாலே வாங்கிக் கொண்டுவனுக்கு ; ஐயன் எய்தச் சென்று ஆரத் தழுவிக் கொண்டு இதனைச் சொன்னான் - விசயன் அணுகச் சென்று மார்புறத் தழுவிக்கொண்டு இவ்வாறு கூறினான்.

   (வி - ம்.) சிலையினெல்லை என்பது ஓரளவும் ஆகும். ஏந்தல் : சீவகன. ஐயன் : விசயன்.

( 85 )
1642 வண்சிலை கொண்ட வாறும்
  வார்கணை தொடுத்த வாறுங்
கண்கணை வைத்த வாறுங்
  கற்செய்தோ ளிருந்த வாறுந்
திண்சரம் விட்ட வாறுஞ்
  சென்றகோல் போந்த வாறுங்
கண்டெலாம் வியந்து நோக்கி
  வில்லுடைக் கடவு ளென்றான்.

   (இ - ள்.) வண்சிலை கொண்ட வாறும் - வலிய வில்லை ஏந்திய வகையையும்; வார் கணை தொடுத்த வாறும் - சிறப்புற நின்று நீண்ட அம்பைத் தொடுத்த படியையும்; கண் கணை வைத்தவாறும் - கண்ணாற் குறிபார்த்து அம்பை அமைத்த படியையும்; கல் செய் தோள் இருந்தவாறும் - மலையனைய தோள் பிறழாமல் இருந்ததையும்; திண் சரம் விட்டவாறும் - வலிய கணையை விட்ட படியையும்; சென்ற கோல் போந்தவாறும் - சென்ற அம்பு கனியின் காம்பை அறுத்துத் திரும்பிய படியையும்; எலாம் கண்டு - எல்லாவற்றையும் பார்த்து; வியந்து நோக்கி - வியப்புற்றுச் சீவகனை நோக்கி; வில்லுடைக் கடவுள் என்றான் - நீ வில்லைப் படைத்த இறைவனே ஆவாய் என்றான்.

   (வி - ம்.) விற்பிடித்தது, கணைதொடுத்தது, இலக்கு வைத்தது அப்போது தோள் இருந்த நிலை இவையெல்லாம் வியந்துநோக்கி என்க.

( 86 )
1643 மராமர மேழு மெய்த வாங்குவிற் றடக்கை வல்வி
லிராமனை வல்ல னென்ப திசையலாற் கண்ட தில்லை
யுராமன மிவன்க ணின்றி யுவக்குமா செய்வ லென்று
குராமலர்க் காவி னீங்கிக் கோயிலே கோண்டு புக்கான்.