பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 952 

   (இ - ள்.) கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட - இளமை பொருந்திய விருப்பூட்டும் முலையிற் பூசிய சந்தனம் குளிர்ச்சி யுண்டாக்காமல் கொதித்து உயிரை வாட்ட; அம் மென் மாலை முகம் கரிய - (மேலே கட்டிய) அழகிய மெல்லிய மாலை கருக; நீர் துளும்ப - கீழ் நின்ற நீர் வெம்மையால் கொதித்து எழ; நின்று நீடி வெம்மைமிக்கது - நீட்டித்து நின்று வெப்பம் மிகுந்தது; பொம்மல் ஓதிக்கு - (அப்போது) பொலிவுறுங் கூந்தலாட்கு; வீரன் தொடுத்த விளங்கும் மாலை தானே துணை ஆம் புணை ஆயிற்று - சீவகன் கட்டிய விளக்கமுறும் மாலை ஒன்றே துணையாகிய தெப்பம் ஆயிற்று.

   (வி - ம்.) கொம்மை - பருமையுமாம்; வட்டமுமாம். ஆவி - உயிர் துளும்ப என்றது கொதித்தெழ என்றவாறு. வீரன் - சீவகன், பொம்மல் ஓதி - கனகமாலை. புணையாயிற்று என்றதனால் அத்துன்பக்கடலை நீந்துதற்கு என்க.

( 118 )
1675 வாச நீலங் கழுநீர் குவளை படைசாற் றிவந்
தோச னைக்க ணுடையு நெடுங்கட் கனக மாலை
தாசிதூ தாகத் தாமம் புணையாகச் செல்லு நாளுட்
காசில் கல்விக் கடலைக் கரைகண்டார் காளை மாரே.

   (இ - ள்.) வாச நீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து - மணமுறும் நீலமும் கழுநீரும் குவளையும் போர் கூறி வந்து; ஓசனைக் கண் உடையும் நெடுங்கண் கனகமாலை - ஓசனைத் தொலைவிலேயே தோற்றோடும் நீண்ட கண்களையுடைய கனகமாலை; தாசி தூது ஆகத் தாமம் புணை ஆகச் செல்லும் நாள் - தனக்கு அநங்க விலாசினி தூதாகவும் சீவகன் மாலை தெப்பமாகவும் நடக்கும் நாட்களிலே; காளைமார் காசு இல் கல்விக் கடலைக் கரைகண்டார் - விசயன் முதலானோர் குற்றம் அற்ற கல்விக் கடலின் கரையைக் கண்டனர்.

   (வி - ம்.) படைசாற்றி வருதல் - போர்க்கு அறைகூவி வருதல். யோசனை - ஓசனை என நின்றது. தாசி - பணிப்பெண்; ஈண்டு அநங்க விலாசினி. காசு - குற்றம். காளைமார் என்றது தடமித்தன் மக்களாகிய விசயன் முதலியோரை.

( 119 )

வேறு

1676 பொருசரஞ் சலாகை வெய்ய புகன்றனர் துரக்கு மாறும்
வருகணை விலக்கு மாறும் வாளமர் நீந்து மாறுங்
கருவியுட் கரக்கு மாறுங் கணைபுறங் காணு மாறும்
விரியமற் றவர்க்குக் காட்ட வீற்றிருந் தவருங் கற்றார்.