2663.'நல்லதே நினைந்தாய்; அது,
     நானும் முன்
சொல்லுவான் துணிகின்றது;
     தோன்றல்! நீ
செல்தி ஆண்டு; அவற்
     சேருதி; சேர்ந்தபின்,
இல்லை, நின்வயின்
     எய்தகில்லாதவே.

    தோன்றல் நீ நல்லதே நினைந்தாய் - சிறந்தவனே! நீ நல்ல
செயலையே எண்ணினாய்; அது நானும் முன் சொல்லுவான்
துணிகின்றது -
அதனையே நான் கூட முன்பே உனக்குச் சொல்லும்படி
நிச்சயித்தது; ஆண்டு செல்தி - அவ்வகத்தியர் ஆச்சிரமத்திற்குப்
போவாயாக; அவற் சேருதி - அம்முனிவனைச்சேர்வாயாக; சேர்ந்தபின்
இல்லை நின்வயின் எய்தகில்லாதவே -
அம்முனிவனை அடைந்த
பின்னர் உன்னிடத்தில் அடையாத பேறுகள் ஒன்றுமில்லை.

     நல்லதே நினைத்தாய் என்றது அகத்தியர் அருளும் படைக்கலன்களைப்
பெறுவதையும் அவற்றால்இராவணனை அழிக்கப் போவதையும் சுதீக்கணர்
ஞானக் கண்ணால் அறிந்து கூறியது. இதன் விளக்கமாகஅடுத்த பாடலில்
(2664) 'சேருதல் செவ்வியோர் நன்று தேவர்க்கும், யாவர்க்கும் நன்று' என்ற
அடிகள் உள்ளன.

     துணிகின்றது என்பது கால வழுவமைதி. செல்தி என்ற வினைமுற்றை
வினையெச்சப் பொருளில்கொண்டு, சென்று சேருதி எனப் பொருள்
கொள்வர்.                                                   33