2517.முத்து இருத்தி அவ் இருந்தனைய
     மொய்ந் நகையொடும்,
சித்திரக் குனி சிலைக் குமரர்,
     சென்று அணுகினார்-
அத்திரிப் பெயர் அருந்தவன்
     இருந்த அமைதி,
பத்திரப் பழுமரப் பொழில்
     துவன்று, பழுவம்.

    சித்திரக் குனிசிலைக் குமரர் - அழகிய, வளைந்த வில்லேந்திய
இராமலக்குவர்; முத்து இருத்தி அவ் இருந்து அனைய - முத்துக்களைப்
பதித்து அவைஒருசேர இருந்தாற் போன்ற; மொய்ந்நகை யொடும் -
நெருங்கிய பற்கள் கொண்டசீதையுடன்; அத்திரிப் பெயர் அருந்தவன் -
அத்திரி என்னும் பெயருடைய செயற்கரியதவம் செய்த பெருமுனிவன்;
இருந்த - தங்கியிருந்த; அமைதி -இடமாகிய; பத்திரப்பழுமரப் பொழில்-
இலையும் பழமும் நிறைந்த மரங்கள்உள்ள சோலைகள்; துவன்று- நெருங்கி
விளங்கும்; பழுவம் - வனத்தை; சென்றுஅணுகினார் - போய்
அடைந்தனர்.

     அத்திரி என்னும் முனிவர் பிரமகுமரர்களுள்ஒருவர் ஏழு
முனிவர்களுள் முன்வைக்கப்படுபவரும் ஆவர். இவரை இராமன் சந்தித்தது
வான்மீகத்தில்அயோத்தியா காண்ட முடிவில் உளது. வில்லுக்குச்
சித்திரமாவது இராமலக்குவர் கையில்ஏந்தியிருத்தல். பழுமரம் ஆலமரமுமாம்.
பழுவம் உறையுளுமாம்.                                          1