2519. | ‘குமரர்’! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ? அமரர் யாவரொடும், எவ் உலகும் வந்த அளவே! எமரின் யார் தவம் முயன்றவர்கள்?’ என்று உருகினன்- தமர் எலாம் வர, உவந்தனைய தன்மை முனிவன். |
தமர் எலாம் வர உவந்தனைய -தம் சுற்றத்தார் யாவரும் வர அது கண்டு மகிழ்ந்தாற் போல; தன்மை முனிவன் -மகிழ்ச்சி நிலை அடைந்த அத்திரி முனிவர்; (இராமலக்குவரைக் கண்டு); ‘குமரர்! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை - தயரதன் மக்காள்! நீங்கள் இவ் விடத்தில் வந்து பெரும்பேறடையஅருளிய (நீங்கள் இங்கு வந்தது) தன்மை; எளிதோ- (எங்களுக்கு) கிடைத்தற்கு எளியதோ?; அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்த அளவே -எல்லாத் தேவர்களோடும் எல்லா உலகங்களும் வந்த தன்மையதே!; எமரின் - எங்களைவிட;யார் தவம் முயன்றவர்கள் - யாரே தவ முயற்சியில் ஈடுபட்டவர்கள்?; என்று உருகினன்- என்று கூறி மனம் உருகினான். சுற்றம் சூழ இருப்பது உலகினர்க்குப் பெருமகிழ்வூட்டும். எனவே தமரெலாம் வர உவந்தனையஎன்றார். எமரின்யார் தவம் முயன்றவர்கள் என்பதற்கு இவ்வரும்பேறு பெற்ற எம்போல் நல்வினைசெய்தார் யார் என்றுமாம். அமரர் - சாவில்லாதவர். தாம்தேடி அடைய வேண்டியவன் தன்னை நாடிவந்ததால் உவப்பு மிகுந்தது. 3 |