2522.செஞ் சுடர்ச் செறி மயிர்ச் சுருள்
     செறிந்த செனியன்,
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை
     நடந்த தென, மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி
     வாத விசையில்
பஞ்சு பட்டது பட, படியின்
     மேல் முடுகியே.

    செஞ்சுடர் - சிவந்த ஒளியுடைய; செறிமயிர்ச் சுருள் செறிந்த -
அடர்ந்தசுருட்டை மயிர்கள் கொண்ட; செ(ன்)னியன் - தலையுடையனாகி;
நஞ்சு வெற்பு உருவுபெற்று - நஞ்சு, மலையின் வடிவைக் கொண்டு;
இடை நடந்தது என -
அவ்வனத்திடைநடந்தது போல; மாமஞ்சு சுற்றிய
வயங்குகிரி -
பெரிய மேகம் சூழ்ந்து விளங்கும்மலைகள், (கால்களின்
நடை வேகத்தால்); வாத விசையில் - காற்றின் விசையால்; பஞ்சு பட்டது
பட -
பஞ்சடையும் நிலையை அடையும் படி; படியின்மேல் முடுகி -
நிலத்தின் மீது விரைந்துநடந்து; ஏ - அசை.

     விராதன் நஞ்சுபோல் கொடுமையும் மலைபோல் வலிய தோற்றமும்
கொண்டவன். அவன் நடைவேகத்தால் எதிர்ப்படு மலைகள். பஞ்சுபோல்
சிதறிப் பறந்தன. தாடகை வருகையையும் இவ்வாறே‘கிரிகள் பின் தொடர
வந்தாள் (368) _ என்பார்._நஞ்சு வெற்புருவு பெற்றிடை நடந்தது என்பது
இல்பொருளுவமை. செனியன் - சென்னியன், இடைக்குறை.              6