2523. | புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க, மழை சூழ் விண் துளங்கிட, விலங்கல்கள் குலுங்க, வெயிலும் கண்டு, உளம் கதிர் குறைந்திட, நெடுங் கடல் சுலாம் மண் துளங்க, வய அந்தகன் மனம் தளரவே. |
புண் துளங்கி அன கண்கள் - புண்கள் துடிப்பது போன்ற கண்களில்; கனல் பொங்க - நெருப்புப் பொறி பறக்க; மழைசூழ் விண் துளங்கிட - மேகம் சூழ்ந்த வானம் நடுங்க; விலங்கல்கள் குலுங்க - மலைகள் நடுங்கிட; வெயிலும் - கதிரவனும்; கண்டு - பார்த்து; உளம் கதிர்குறைந்திட - மனம் ஒளி கெட; நெடுங்கடல் சுலாம்- பெரியகடல் சூழ்ந்த; மண்துளங்க- நிலம் நடுங்க; வய அந்தகன் - வலிமையுடைய யமனும்; மனம் தளர - உள்ளம் தளர்ச்சி அடைய; ஏ - அசை. கண்ணில் கனல் பொங்குவது புண்ணில் செந்நிறம் விளங்குவது போன்றது, வெயில், மழை -ஆகுபெயர். அந்தகன் - உயிர்களுக்கு முடிவை உண்டாக்கும் கண்ணற்றவன். 7 |