2525. படையொடு ஆடவர்கள், பாய் புரவி,
     மால் களிறு, தேர்,
நடைய வாள் அரிகள், கோள்
     உழுவை, நண்ணியஎலாம்
அடைய வாரி, அரவால் முடி,
     அனேக வித, வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு
     தோள் பொலியவே.

    படையொடு ஆடவர்கள் - போர்க் கருவி ஏந்திய வீரர்கள்; பாய்
புரவி -
தாவிப்பாயும் குதிரைகள்; மால்களிறு - பெரிய மத யானைகள்,
தேர் - தேர்கள்;நடைய - உலாவும்; வாள் அரிகள் - ஒளியுடைய
சிங்கங்கள்; கோள் உழுவை -உயிரைக் கொள்வதைத் தொழிலாகக்
கொண்ட புலிகள்; நண்ணிய எலாம் - இவ்வாறுதன்னை அடைந்த
யாவற்றையும்; அடைய வாரி - முழுவதும் வாரிக் கொண்டு வந்து, அரவால்
முடி -
பெரிய பாம்பால் தொகுத்துக்கட்டிய; அனேக வித வன் தொடையல்
மாலை -
பலவிதமான, வலிதாகத் தொடுக்கப்பட்ட மாலைகள்; துயல்வந்து -
தொங்கி அசையும், உலவு தோள் - விசாலமான தோள்கள்; பொலிய -
விளங்க, ஏ - அசை.

     ‘படையொடு... தேர்’ என நாற்படையும் வந்தன. வாரி என்றதால்
எளிமையாக அள்ளி எடுத்தமைபுலனாம்                            9