2526.குன்று துன்றின எனக் குமுறு
     கோப மதமா
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின
     தடக் கை உதவ,
பின்றுகின்ற பிலனின் பெரிய
     வாயின்ஒரு பால்
மென்று தின்று விளியாது
     விரியும் பசியொடே.

    குன்று துன்றின என - மலைகள் நெருங்கின போல; ஒன்றின் ஒன்று
இடை அடுக்கின -
ஒன்றின் மேல் ஒன்றாகத்தன்னிடம் அடுக்கப் பெற்ற;
குமுறு கோப மதமா - பிளிறும், சினத்தையுடைய மதயானைகளை;
தடக்கை உதவ - தன் பெரிய கைகள் உதவ; பின்றுகின்ற பிலனின்
பெரிய வாயின் -
(போகப்போக) பின்னும் செல்கின்ற குகை போன்ற
பெரிய வாயிடத்தில்; ஒருபால் மென்றுதின்று - ஒரு பக்கத்தில் (அந்த
யானைகளை)மென்று தின்று கொண்டிருக்கும்; விளியாதுவிரியும் -
அடங்காது மேலும் மிகுகின்ற; பசியோடு - பெரும்பசியுடன்; ஏ - ஈற்றசை.

     ‘இடை இடுக்கிய’ எனக் கொண்டு தன் விரலின் இடையே இடுக்கி
வைக்கப் பெற்ற (கை) எனவும்பொருள் கொள்வர். அந்த யானைகள் அவன்
வாயில் ஒருபுறத்துக்கே போதா. விளிதல் - கழிதல்,நீங்கல்             10