2527.பன்னகாதிபர் பணா மணி
     பறித்து, அவைபகுத்-
தென்ன, வானவர் விமானம்
     இடையிட்டு அரவிடைத்
துன்னு கோளினொடு தாரகை
     தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு
     தட மார்பினொடுமே

    பன்னகாதிபர் - பாம்பின் தலைவர்களாம் வாசுகி முதலிய பாம்புகளின்;
பணாமணி பறித்து - படங்களிலுள்ளநாகரத்தினங்களைப் பிடுங்கிவந்து;
அவை பகுத்து என்ன - அவற்றைப் பிரித்துப்பதித்தாற் போல;
அரவிடை - மலைப்பாம்புகளின் உடலிலே; வானவர் விமானம்
இடையிட்டு -
தேவர்களின் விமானங்களை இடையிடையே தொங்கவிட்டு;
துன்னு கோளினொடு -விளங்கும் ஒன்பது கிரகங்களுடனே; தாரகை -
விண்மீன்களை; தொடுத்த - கட்டிய; துழனி - ஒலியுடன் கூடிய;
சன்னவீரம் - ஒருவகை வெற்றிமாலை; இடைமின்னு - இடையே
விளங்கும்; தட மார்பினொடும் - பரந்த மார்புடன்; ஏ - ஈற்றசை.

     பன்னகம் - பாம்பு, பன்னகாதிபர் - வாசுகி, ஆனந்தன், தட்சன்,
சங்கபாலன், குளிகன்,பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் எனும்
எட்டுக்குலநாகங்கள் பணம் - படம், துழனி,ஒன்றோடொன்று மோதி எழும்
ஒலி. விராதன் அணிந்த வெற்றிமாலையில் தேவர்களின் விமானம்,கிரகங்கள்,
விண்மீன்கள் ஆகியவை கோக்கப் பெற்றிருந்தன.                     11