2529. | தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ, பொங்கு வெங் கொடுமை என்பது புழுங்கி எழ, மா மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக் கங்குல், பூசி வருகின்ற கலி காலம் எனவே |
தங்கு திண் கரிய காளிமை - பொருந்திய வலிய மிகுந்த கறுப்பு; தழைந்து தவழ - செழித்து விளங்க, பொங்குவெங்கொடுமை என்பது - மேற்கிளம்பும் பெரும் கொடுமை எனும் தீயபண்பு; புழுங்கி எழ -கோபித்து மேற்கிளம்ப; மங்கு மா பாதகம் - மிகக்கேட்டை உண்டாக்கும் பெரும்பாவமும்; விடம் கனல் - நஞ்சும் நெருப்பும்; வயங்கு திமிர - விளங்கிச்செருக்கிய; கங்குல் பூசி வருகின்ற - இருளைப் பூசிக்கொண்டு வரும்; கலிகாலம் என -கலிகாலம் (எதிரே உருவெடுத்து வந்தாற்) போல; ஏ - ஈற்றசை. காளிமை - கருமை. விராதனின் நிறம் கறுப்பு; வடிவோ கொடுமை; செயலோ தீவினை; அவனுக்குநஞ்சும் தீயும் கலிகாலமும் உவமை. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. 13 |