2530. | செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச் சுற்றி, வாரண உரித் தொகுதி நீவி தொடர, கொற்றம் மேவு திசை யானையின் மணிக் குலமுடைக் கற்றை மாசுணம் விரித்து வரி, கச்சு ஒளிரவே |
செற்ற - (தான்) கொன்ற; வாள் உழுவை வன் செறி அதள் - கொடிய புலியின் வலிய நெருங்கியதோல்; திருகுற - (தன் மார்பில்) சுருண்டு விளங்க; சுற்றி - சுற்றி உடுத்துக்கொண்டு; வாரண உரித் தொகுதி - பல யானைகளின் தோற்கூட்டம்; நீவி தொடர - அரையில் கட்டிய ஆடையாகத் தொடர்ந்திருக்க; கொற்றம் மேவு திசை யானையின்- வெற்றி பொருந்திய எட்டுத்திக்கு யானைகளின்; மணிக்குலம் உடை - மணிக்கூட்டங்களைஉடைய; கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு - பெரிய மலைப்பாம்பை விரித்து இழுத்துக்கட்டிய இடைக்கச்சு; ஒளிர - விளங்க; ஏ - ஈற்றசை. விராதன் கொன்ற புலியின் தோல் அவனுக்கு மேலாடையாகவும், யானைத் தோல் அரையில்கட்டும் ஆடையாகவும், திசையானைகளின் மணிகளைக் கோத்த மலைப்பாம்பு கச்சாகவும் விளங்கின.நீவி - ஆடை, கொய்சகமும் ஆம். 14 |