2533.பூதம் அத்தனையும் ஓர் வடிவு
     கொண்டு, புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன்; உரும்
     ஒத்த குரலன்;
காதலித்து அயன் அளித்த, கடை
     இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்புஅவை
     படைத்த வலியான்.

    பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு - ஐந்து பூதங்களும் ஓர்
உருவம் எடுத்துக்கொண்டு; புதிது என்று ஓத ஒத்த உருவத்தன் -
புதுமையான ஒரு வடிவு எடுத்து இவ்வாறு வந்தனஎன்று சொல்லத் தக்க
வடிவுடையவனும்; உரும் ஒத்த குரலன் - இடி ஓசையைப் போன்ற
குரலோசை உடையவனும்; அயன் காதலித்து அளித்த கடையிட்ட பாத
கணித லக்கம் -
பிரமன்மகிழ்ந்து கொடுத்த கடையிலே கணக்கிட்டு வைத்த
கால் இலட்சம்; மதவெற்பு அவை படைத்தவலியான் - மதயானைகளாம்
அவ்விலங்குகள் அடைந்த வலிமையை உடையவன்.

     விராதனின் வலிய உருவமும் கொடிய குரலும் கூறப்பட்டுள்ளன.
கடையிட்ட பாதலக்கம் ஒன்றேகால் இலட்சம். வெற்பு - ஆகுபெயர்.     17