2534. | சார வந்து, அயல் விலங்கினன்- மரங்கள் தரையில் பேர, வன் கிரி பிளந்து உக, வளர்ந்து இகல் பெறா வீர வெஞ் சிலையினோர் எதிர், விராதன் எனும் அக் கோர வெங் கண் உரும்ஏறு அன கொடுந் தொழிலினான். |
விராதன் எனும் அக்கோர வெங்கண் உரும் ஏறு அன கொடுந் தொழி லினான் - விராதன் என்று சொல்லப்படும் அந்த அச்சமூட்டும் கொடிய கண்களையும் பேரிடி போன்ற கொடியதொழிலையுமுடையவன்; (வரும் வேகத்தால்); மரங்கள் தரையில் பேர - மரங்கள்நிலத்தில் நின்ற இடம் விட்டுப் பெயர்ந்து விழவும்; வன்கிரி பிளந்துக - வலியமலைகள் பிளவுண்டு சிதறவும்; வளர்ந்து இகல் பெறாவீர வெஞ்சிலையினோர் எதிர் சார வந்துஅயல் விலங்கினன் - பேருருக்கொண்டு வளர்ந்து போரைப் பெறாத வீரமும் கொடிய வில்லும்உடைய இராமலக்குவர் முன்னே அருகில் வந்து எதிராகக் குறுக்கிட்டு நின்றான். விலங்கினன் - குறுக்கிட்டான். விராதன் - எதிலும் நிறைவு பெறாதவன். 18 |