விராதன், சீதையைக் கவர்ந்து செல்லுதல்

2535.நில்லும், நில்லும் என வந்து, நிணம்
     உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு
     வாய் முழை திறந்து,
அல்லி புல்லும்அலர் அன்னம்
     அனையாளை, ஒரு கை,
சொல்லும் எல்லையில், முகந்து உயர்
     விசும்பு தொடர

    நிணம் உண்ட நெடுவெண் பல்லும் வல்எயிறும் - தசையைப்
புசித்த நீண்ட வெண்ணிறப் பற்களும் வலிய கோரப்பற்களும்; மின்னு
பகுவாய் முழைதிறந்து -
விளங்கும் பிளந்த வாயாகிய குகையைத் திறந்து;
‘நில்லும் நில்லும்’ எனச்சொல்லும் எல்லையில் - ‘நில்லுங்கள்,
நில்லுங்கள்’ என்று சொன்ன அளவில்; அல்லிபுல்லும் அலர் அன்னம்
அனையாளை -
அகவிதழ்கள் நெருங்கிய தாமரை மலரில் வீற்றிருக்கும்
அன்னப் பறவை போன்ற சீதையை; வந்து ஒருகை முகந்து உயர்விசும்பு
தொடர -
எதிர் வந்துஒருகையால் எடுத்து உயர்ந்த வானத்தில் தொடர்ந்து
செல்ல;

     எயிறு - பல்லின் விளிம்பும் ஆம். நில்லும் நில்லும் - அடுக்கு.
அன்னம் -ஆகுபெயர்.                                         19