2536.காளை மைந்தர் அது கண்டு,
     கதம் வந்து கதுவ,
தோளில் வெஞ் சிலை இடங் கொடு
     தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங் கையவர்,
     ‘வஞ்சனை; அடா!
மீள்தி; எங்கு அகல்தி’ என்பது
     விளம்ப, அவனும்

    காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ - இளம் எருது
போன்ற இராமலக்குவர் அதனைப் பார்த்து, சினம் பிறந்து பற்றி; தோளில்
வெஞ்சிலை இடங்கொடு -
தோளிலே மாட்டிய கொடிய வில்லைத் தம்
இடக்கையில் பிடித்துக்கொண்டு; சுடர் வாய் வாளி தங்கிய வலங்
கையவர் -
ஒளி பொருந்திய அம்புகள் கொண்டவலக்கையினராய்;
தொடர்ந்து - அவ்விராதனைப் பின்தொடர்ந்து, அடா! வஞ்சனைமீள்தி
எங்கு அகல்தி -
ஏ அற்பனே! இச்செயல் வஞ்சகமானது; திரும்புவாயாக! நீ
எங்கேசெல்கிறாய்?, என்பது விளம்ப - என்னும் சொற்களைக் கூற;
அவனும் - அவ்வரக்கனும்.

     காளை - பெருமிதம், வலிமை, நடை முதலியவற்றில் சிறந்ததால்
ஆடவர்க்கு உவமை. அகல்தி -முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று. 20