2537. | ‘ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்; ஏதி யாவதும் இன்றி, உலகு யாவும் இகலின், சாதியாதனவும் இல்லை; உயிர் தந்தனென்; அடா! போதிர், மாது இவளை உந்தி, இனிது’ என்று புகல |
ஆதிநான் முகன் வரத்தின் - படைப்பில் முதலில் தோன்றிய பிரமன் எனக்குக் கொடுத்த வரத்தினால்; எனது ஆவி அகலேன் -என் உயிர் நீங்க மாட்டேன்; ஏதியாவதும் இன்றி - ஆயுதங்கள் ஒன்றும் இல்லாமலேயே; உலகு யாவும் இகலின் சாதியாதனவும் இல்லை - எல்லா உலகத்தவரும்எதிர்த்துப் போரிட்டாலும் நான் வெல்லக் கூடாதன இல்லை; அடா! உயிர் தந்தனென் - அற்பர்களே! உங்களுக்கு இரங்கி உயிர்ப்பிச்சை கொடுத்தேன்; மாது இவளை உந்தி இனிதுபோதிர் - இப்பெண்ணை என்னிடம் விட்டு இனிதே செல்லுங்கள்; என்று புகல - என்றுவிராதன் சொல்ல, தேவர்களில் முதலில் வைத்துஎண்ணப்படுபவன் நான்முகன் எனலும் ஆம். ஏதி - காரணம் எனலுமாம். இனி விராதன் இறப்பதைமுன்னமே தெரிவிக்கும் அமங்கலப் பொருள் படக் கூறும் நெறி: அடா - இவ்வாறு நான் செய்வனதகாதனவே. உயிர்தந்தனென் - என் உயிரைக் கொடுத்து விடுகிறேன், மாதிவளை உந்தி இனிதுபோதிர் - இப்பெண்ணை அழைத்துக் கொண்டு இனிதே செல்வீர், என்பதாம். போதிர் - முன்னிலைஏவல் பன்மை வினைமுற்று. 21 |