இராமன் போர் தொடுத்தல் 2538. | வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக, ‘போர் அறிந்திலன் இவன்; தனது பொற்பும் முரணும் தீரும், எஞ்சி’ என நெஞ்சின் உறு சிந்தை தெரிய, பார வெஞ் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே, |
வீரனும் சிறிது மென்முறுவல் வெண்நிலவு உக - இராமனும் புன்சிரிப்பாகிய வெள்ளிய நிலவொளி தோன்ற; போர் அறிந்திலன் இவன்- போர் செய்யும் முறையை அறிந்தவன் அல்லன் இவன்; தனது பொற்பும் முரணும் எஞ்சி தீரும் என- இவனது பொலிவும் வலிவும் குறைந்து அழியும் என்று; நெஞ்சின் உறு சிந்தை தெரிய - தன்மனத்தின் எண்ணம் வெளிப்பட; பார வெஞ்சிலையின் நாண் ஒலி படைத்த பொழுது- வலிய கொடிய வில்லின் நாண் ஓசையை உண்டாக்கிய காலத்தில்; ஏ - ஈற்றசை. போரிடாமல் வஞ்சகமாய்ச் சீதையைக் கவர்ந்து சென்றதால் விராதன் போரறிந்திலன்எனப்பட்டது. பொலிவு - வீரத்தால் விளங்கும் தன்மை. முறுவல், நிலவு - ஆகுபெயர். 22 |