2539. | இலை கொள் வேல் அடல் இராமன், எழுமேக உருவன், சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு, திரை நீர், மலைகள், நீடு தலம், நாகர் பிலம், வானம் முதல் ஆம் உலகம் ஏழும், உரும்ஏறு என ஒலித்து உரறவே |
எழுமேக உருவன் இலை கொள் வேல் அடல் இராமன் - மேல் எழுகின்ற நீருண்டது போன்ற மேகத்தின் நீல நிறமுடையவனாகிய அரசிலை போன்ற நுனியுடையவேலேந்திய வலிய இராமன்; சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலிஏறு - வில்லிற் கொண்டநீண்ட கயிற்றின் மிக்க ஒலியானது; திரைநீர் மலைகள் நீடுதலம் நாகர் பிலம் வானம்முதலாம் உலகம் ஏழும் - அலைகள் கூடிய கடலின் நீரும் மலைகளும் சூழ்ந்த நீண்ட நிலவுலகமும்நாகர் வாழும் பாதலமும் சுவர்க்க லோகமும் முதலாகிய ஏழு உலகங்களும்; உரும் ஏறு என ஒலித்துஉரற - பேரிடி ஏறு போலப் பெருமுழக்கம் உண்டாக்க; ஏ - ஈற்றசை. இராமன் எறிந்த வில்லின் நாணொலி ஏழு உலகங்களிலும் இடி ஏறு போல ஒலித்தது. வேல்படைகொண்டு போவதும் தமிழ் மரபு பற்றிக் கூறி ஏனைப் படைகளையும் பெறவைத்தார். மேல் உலகம்ஏழாவன: பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தபோலோகம், சத்தியலோகம். கீழேழு உலகம்: அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம்,பாதாளம். உரற - எதிரொலிக்க. 23 |