விராதன், சீதையை விடுத்து இராமலக்குவரை எதிர்த்தல்

2540.வஞ்சகக் கொடிய பூசை நெடு
     வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு
     பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன் என, சிறிது
     நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர்
     அரக்கன் அழலா

    அரக்கன் - அவ்விராதன்; வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் -
வஞ்சத்தன்மையுடைய கொடிய பூனையின்பெரிய வாயிலே; மறுகும் பஞ்சரக்
கிளி எனக் கதறு பாவையை விடா -
அகப்பட்டுத்தவிக்கும் கூட்டிலுள்ள
கிளி போலக் கூச்சலிடும் சீதையைக் கீழே விட்டு; நெஞ்சு உளுக்கினன்
என -
மனஞ்சிதைந்தவன் போல; சிறிது நின்று நினையா - சற்றே நின்று
சிந்தித்து;அஞ்சனக் கிரி அனான் எதிர் அழலா - கரியமலை போன்ற
இராமனுக்கு எதிரில்வந்துகோபித்து;

     பூசை - பூனை (4). பாவை - ஆகுபெயர் அஞ்சனம் - கருமை.    24