2541. | பேய்முகப் பிணி அறப், பகைஞர் பெட்பின் உதிரம் தோய் முகத்தது, கனத்தது, சுடர்க் குதிரையின் வாய்முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் தீ முகத் திரி சிகைப் படை திரித்து எறியவே |
பேய்முகப்பிணி அற - பேய்களிடத்திலுள்ள பசியாகிய நோய் நீங்க; பகைஞர் உதிரம் - எதிரிகளின்இரத்தத்திலே; பெட்பின் தோய் முகத்தது - விருப்பத்தோடு தோய்ந்த நுனியை உடையதும்;கனத்தது - வலிமையுடையதும், சுடர்க் குதிரையின் - தீச்சுடர் விட்டெரியும்குதிரை உருவில்; வாய்முகத்திடை நிமிர்ந்து - வாயும் முகமும் தன்னிடம் கொண்டு மேலோங்கி; வடவேலை பருகும் - வடதிசையிலுள்ள கடல்நீரைப் பருகும்; தீமுகத் திரிசிகைப் படை திரித்தெரிய - தீயைத் தன்னிடம் கொண்டதும் ஆன முப்பிரிவான சூலத்தைச்சுற்றி இராமன் மீது எறிய; ஏ - ஈற்றசை. விராதனின் சூலப்படை இரத்தம் தோய்ந்திருந்ததால் பேய்கள் அதைக் குடித்துப் பசிதீர்ந்தன. என்றும் பசிநீங்காப் பேயும் பசி தீர அவன் பகைவரை அழித்துக் கொண்டே இருந்தான்என்பதாம். வடவைத் தீ என்பது வடகடலில் பெண்குதிரை வடிவில் உள்ள தீ எனப் புராணங்கள் கூறும். அத்தீயே மூன்று நாவுடன் உள்ளது போல விராதனின் படை விளங்கியது. வடகுதிரை எனப்’படபை’ என்றபெண் குதிரையைச் சுட்டும் என்பர். திரிசிகைப் படை -முத்தலைச்சூலம். 25 |