2542. | திசையும், வானவரும், நின்ற திசை மாவும், உலகும் அசையும் ஆலம் என, அன்ன அயில் மின்னி வரலும், வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே |
அன்ன அயில் - அந்தச் சூலப்படை; திசையும் - எண் திசைகளும்; வானவரும் - அவ்வெட்டுத்திசைக்காவல் செய் தேவரும்; திசைநின்ற மாவும் - அத்திக்குகளில் நின்ற எட்டுயானைகளும்; உலகும் - உலகங்களும்; அசையும் - கலங்கக் காரணமான; ஆலம் என- ஒரு நஞ்சென; மின்னிவரலும் - ஒளிவீசி வரவும்; இராமன், வசையில் மேரு முதல்மால் வரைகள் ஏழின் வலி சால் - குற்றமில்லாத மேரு முதலாக உள்ள மலைகள் ஏழை விட வலிமைமிக்க; விசைய வார்சிலை - வெற்றித் தரும் நீண்ட வில்லிலிருந்து; ஒருவாளி விட -ஓரம்பைத் தொடுத்து எய்ய: ஏ - ஈற்றசை. திசையும் வானவரும் என்பதற்குத் திகைக்கும் தேவரும் எனவும் பொருள்படும். எ.டு. ‘நீதிசைத்தது உண்டோ’ (1512) திசைவானவர் - இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் என எண்மர். எட்டுத்திக்கு யானைகள் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபௌமம், சுப்பிரதீபம் என்பன. மா - விலங்கின் பொதுப் பெயர்.ஏழுமலைகளாவன: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி என்பன.விசயம் என்பது விசையம் என எதுகை நோக்கித் திரிந்தது எனலாம். விசைய என்பதற்கு வேகமாகஎனவும் பொருள் கூறுவர். ஒரு - ஒப்பற்ற எனவுமாம். 26 |