2544. | சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு, சிறிதும் போர் ஒடுங்கலன், மறம்கொடு புழுங்கி, நிருதன் பார் ஒடுங்குறு கரம்கொடு பருப்பதம் எலாம் வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து, விடலும் |
நிருதன் - அவ்வரக்கன்; சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு - கொடுமை தங்கியுள்ள தன்சூலம்துண்டுபட்டு அழிந்ததைப் பார்த்தும்; சிறிதும் போர் ஒடுங்கலன் - போர் செய்தலிற்சற்றும் தளர்ச்சி இல்லாதவன் ஆகி; மறம்கொடு - வீரப்பண்பை மேற் கொண்டு; புழுங்கி - கோபத்தால் மனம் வெதும்பி; பார் ஒடுங்குறுகரம் கொடு - நிலவுலகு ஒடுக்கமுறும்படியான தன் பெரிய கைகளால்; பருப்பதம் எலாம் - மலைகளை எல்லாம்; வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் வேரோடு விரைவாகப் பிடுங்கி எடுத்துஇராமனுக்கு எதிராக வேகமாக எறிந்ததும். தன் சூலப்படை இராமன் அம்பால் துண்டுபடினும் பின் வாங்காமல் போர் புரிந்தான். சூர்என்பதற்குத் தேவர், வஞ்சம், கொடுந் தெய்வம் எனப்பல பொருள் கூறுவர். பருப்பதம் -பர்வதம். 28 |