2545.வட்டம் இட்ட கிரி அற்று உக,
     வயங்கு வயிரக்
கட்டு அமைந்த கதிர் வாளி,
     எதிரே கடவலால்,
விட்ட விட்ட மலை மீள, அவன்
     மெய்யில், விசையால்
பட்ட பட்ட இடம் எங்கும்,
     உடல் ஊறுபடலும்

    வட்டம் இட்ட கிரி அற்று உக - விராதன் எறிந்த சூழ்ந்து வரும்
மலைகள் பிளவுபட்டு விழுமாறு; (இராமன்) வயங்கு வயிரக் கட்டு
அமைந்த கதிர்வாளி எதிரே கடவலால் -
விளங்குகின்ற உறுதியான
கட்டுப் பொருந்தியஒளிமிக்க அம்புகளை (விராதனுக்கு) எதிராக எய்தலால்;
விட்ட விட்ட மலை மீள -
(அவன்) மேன்மேல் எறிந்த மலை எல்லாம்
திரும்பவும்; அவன் மெய்யில் - விராதன்உடலில், விசையால் பட்ட
பட்ட இடம் எங்கும் உடல் ஊறு படலும் -
வேகத்தோடுஎறிப்பட்ட
இடங்களில் எல்லாம் உடம்பு காயம் பட்ட அளவில்.

     ‘வட்டமிட்ட’ என்ற தொடரை வாளியுடன் சேர்ப்பதும் உண்டு. பட்ட
பட்ட - மிகுதிபற்றிஅடுக்கு வந்தது. விராதன் எறிந்த மலைகள் இராமன்
அம்பினால் திரும்பி அவனையே காயப்படுத்தின.ஊறு - புண்.         29