2546. | ஓம் அ ராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் நாமர் ஆம் அவரை, நல் அறம் நிறுத்த நணுகித் தாம் அரா-அணை துறந்து தரை நின்றவரை, ஓர் மா மராமரம் இறுத்து, அதுகொடு எற்ற வரலும் |
ஓம் அ ராமரை - ஓம் எனும் பிரணவ மந்திரப் பொருளாகிய இராம பிரானை; ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்நாமர் ஆம் அவரை - முற்றும் உணர்த்த பெரியோரே அறியத்தக்க இராமன் எனும் திருப்பெயர் கொண்ட அவரை; நல்லறம் நிறுத்த - சிறந்த தருமத்தை நிலை நிறுத்தற்காக; தாம்அரா அணை துறந்து தரை நணுகி நின்றவரை - தமக்குரிய ஆதிசேடனாம் பள்ளியை விட்டு நீங்கிஉலகில் வந்து அவதரித்தவரை; ஓர் மா மராமரம் இறுத்து - ஒரு பெரிய ஆச்சா மரத்தைப்பிடுங்கி ஒடித்து; அது கொடு எற்ற வரலும் - அதனைக் கொண்டு அடிக்கவரவும். இராமனின் நிலையை அறியாது விராதன் இவ்வாறு செய்கிறான் என்பது தோன்ற ‘ஓம் அ ராமரை’எனக் கவி சிறப்பித்துக் கூறுகிறார். ஓம் ராமரை என ஓமங்களால் விளங்கும் வேள்வியும்வேள்விப்பயனுமாய் விளங்கும் இராமனை எனவும் குறிப்பர். இராம நாமம் என்பது நல்லறிவுடையோர் அறியும் பொருளாக விளங்குவது (இராமர் என்ற சொல்லைக் கொண்ட இச்செய்யுள் இடைச் செருகல்என்பர் சிலர்) திருவனந்தாழ்வான் இலக்குவனாய் அவதரித்ததையும் ஒருவாறு குறிப்பிடும். இதுதிரிபு எனும் சொல்லணி கொண்டது. 30 |